பதிவு செய்த நாள்
25
மே
2013
10:05
சென்னை: ஒவ்வொரு கோவிலும், வாழும் வரலாறு. கோவில் கல்வெட்டுகளின் மேல், சிவ சிவ என, சுண்ணாம்பால் எழுதுவதும், சிவப்பு சுண்ணாம்பு பூசுவதும் தவறு, என, தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற துணைக் கண்காணிப்பாளர், கி.ஸ்ரீதரன் கூறினார்.தொல்லியல் துறையின் சார்பில், ஒவ்வொரு மாதமும், "திங்கட்பொழிவு என்ற பெயரில், தொல்லியல் குறித்த கருத்தரங்கு, நடத்தப்பட்டு வருகிறது.இந்த மாதம், "வரலாறு காட்டும் கோவில் திருப்பணிகள் என்ற தலைப்பில், தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற துணைக் கண்காணிப்பாளர், கி.ஸ்ரீதரன், சிறப்புரையாற்றினார். தொல்லியல்துறை கமிஷனர் (பொறுப்பு) வசந்தி தலைமை தாங்கினார்.
கி.ஸ்ரீதரன் பேசியதாவது: சங்ககாலத்துக்கு முன்பு, தமிழகத்தில் இருந்த கோவில்கள், செங்கற்களால் ஆனவை. அதற்கு இலக்கிய குறிப்புகள் உள்ளன. பல்லவர் காலக்கட்டத்தில், கற்களால் ஆன, கோவில்களும், சுண்ணாம்பு, கல், மரம் போன்ற எந்த உபகரணமுமின்றி கட்டப்பட்ட, குடவரைக்கோவில்களும், கட்டப் பட்டன. சோழர்கள் காலத்தில், பெரும்பாலான கோவில்களின் திருப்பணிகள் நடந்தன.செம்பியன்மாதேவி, திருப்பணி மேற்கொண்டதற்கு, பல்வேறு கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. கோவில்களின் கட்டுமானத்தில், ஆண்கள், பெண்கள் என, அனைவரும் பயன்படுத்தப் பட்டனர். கோவில் கட்டுமானத்தை கண்காணிப்பதற்கு, "கண்காணியாக தனி அதிகாரியும் இருந்தனர் என, அறியமுடிகிறது.
"அதிகாரிச்சிகள் பணிபுரிந்தனர்குறிப்பாக, பெண்கள், "அதிகாரிச்சியாகவும் பணிபுரிந்தனர். ஒரு கோவிலின் கட்டுமானத்தில், நான்கு சிற்பிகள் பணிபுரிந்தனர். பல கோவில்களில், சிற்பியின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளது.எந்த வடிவமைப்பில், கோவில் கட்டுமானத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான அளவுகோல்கள் இருந்தன. இதற்கு, "முழம் என்று பெயர். பல கோவில்களின் கல்வெட்டுகளில், "தச்ச முழம் என்ற வார்த்தை, உள்ளது.கோவிலின் கட்டுமானத்துக்கு, மன்னர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் நன்கொடை வழங்கினர். மன்னர்களிடமும், அப்பகுதி பொதுமக்களிடமும் அனுமதி பெற்ற பிறகே, கோவிலை கட்டும் மரபு இருந்துள்ளது. தில்லையாடி என்ற ஊரில், கோவிலைச் சுற்றி வசித்த நெசவாளர்கள், தங்களின் சம்பாத்தியத்தில் இருந்து, ஒரு காசை, கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினர் என, அறிய முடிகிறது.சிதம்பரம் கோவிலில், கோவில் கட்டுமான பணி பற்றிய, ஓவியம் காணப்படுகிறது. இதில், எவ்வாறு கோவில் கட்டுமானப் பணி நடந்தது, எந்த முறையில் நடந்தது, எப்படி கற்களைக் கொண்டு சென்றனர் போன்ற விவரங்கள் உள்ளன.
கோவில்களில், திருப்பணி மேற்கொள்ளும் போது, கல்வெட்டுகள் சிதைந்தால், சிதைந்த கல்லுக்கு மாற்றாக, புதிய கல் அமைத்து, அதில், கல்வெட்டு அழிவு என, குறிப்பிட்டுள்ளனர்."சுண்ணாம்பு வைக்க வேண்டும் "சிவபுண்ணியத் தெளிவு என்ற நூலில், கோவிலின் சீரமைப்பு குறித்த, குறிப்புகள் காணப்படுகின்றன. அதில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடத்த வேண்டும் என, குறிப்பிடப்படுகிறது. திருச்சியை அடுத்த, அன்பில் என்ற ஊரில் காணப்பட்ட கல்வெட்டில், "கோவில் கோபுரத்தில், செடி முளைத்தால், செடியை வேரோடு பிடுங்கி, அந்த இடத்தில், சுண்ணாம்பு வைக்க வேண்டும். இது அம்மன் உத்தரவு என, எழுதப்பட்டுள்ளது.சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கற்கோவில்களில், நுட்பமான வேலைப்பாடுகள் காணப்படுகிறது. திருச்சி மலைக்கோட்டை கோவிலில், கற்களால் செய்யப்பட்ட சங்கிலி, இன்னும் உள்ளது.அதே போல், உடையார்பாளையம் கோவிலிலும், இது போன்ற சங்கிலிகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு கோவிலும், வாழும் வரலாறு. கிராமப்புறங்களில் உள்ள, கோவில்கள் முறையான பராமரிப்பின்றி காணப்படுகின்றன.பல கோவில் கல்வெட்டுகளின் மேல், சிவ சிவ என, சுண்ணாம்பால் எழுதியுள்ளனர். சிவப்பு சுண்ணாம்பு பூசுகின்றனர். அதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.