பதிவு செய்த நாள்
25
மே
2013
10:05
நாகர்கோவில்: வடிவீஸ்வரம், அழகம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, புதிய கோபுரம் அமைப்பதற்கான பணிகள், நேற்று தொடங்கின. கன்னியாகுமரி மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று, வடிவீஸ்ரம் அழகம்மன் கோயில். நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில், சிவனும், பார்வதியும் ஒருங்கே இணைந்து, அழகம்மனாக அருள் பாலிப்பதாக, வரலாறு கூறுகிறது. வடிவீஸ்வரம் கிராமத்தின், வடகிழக்கு மூலையில், இக்கோவில் அமைந்துள்ளது. வடிவீஸ்வரம் என்ற பெயரும், இந்த கோவிலின் வரலாற்றுடன் இணைந்துள்ளது. "வடிவு என்றால், அழகு; "ஈஸ்வரா என்பது, சிவன். இப்படி கோவிலின் கடவுள் பெயருடன் இணைந்து, இந்த கிராமத்தின் பெயர் அமைந்துள்ளது. அழகம்மன், சிவன் ஆகியோருக்கான சன்னதிகளுடன், கணபதி, விஷ்ணு, முருகன், சனீஸ்வரன், நடராஜர் என, முக்கிய சன்னதிகளும் இங்கு உள்ளன. சனீஸ்வரருக்கு பிரதி உள்ள அபூர்வ கோயில்களில், இதுவும் ஒன்று. இந்த கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த, தற்போது முடிவு செய்யப்பட்டு, 1.80 கோடி ரூபாய் செலவில், பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இங்கு நான்கு வாசல்களிலும் கோபுரம் அமைக்க, "தேவபிரஸ்னம் பார்க்கப்பட்டது.
புதிய கோபுரத்துக்கான மாதிரி வடிவம் தயாரிக்கப்பட்டது. இதற்கு, இந்து அறநிலையத் துறையும் அனுமதி வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, நேற்று காலை, புதிய கோபுரத்துக்கான கால்கோள் பணிகள் நடந்தன. கும்பாபிஷேக பணிகளுக்கு, நன்கொடை அளிக்க விரும்பும் பக்தர்கள், IOB, Meenakshipuram branch, Nagercoil. A/C No:133601000099990, IFSC CODE: IOB A0001336 என்ற வங்கி கணக்கில் செலுத்தலாம். மேலும் விபரங்களுக்கு, info@azhagammantemple.com என்ற இமெயில் முகவரியிலும், 98410 24125, 88253 60494 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.