பதிவு செய்த நாள்
25
மே
2013
10:05
தஞ்சாவூர்: திட்டை கோவிலில் குருபெயர்ச்சி விழாவில் நடப்பாண்டு, நூதன ஏற்பாடாக, குருபகாவான் சந்நிதியில் சிறப்பு பரிகார பூஜைக்கு கட்டணத்தை எம்.ஓ., "டிடியில் பக்தர்கள் அனுப்பினால், தபாலில் பிரசாதம் அனுப்பப்படும், என, ஹிந்து அறநிலையத்துறை அதிகாரி அறிவித்துள்ளார்.தஞ்சை அடுத்த திட்டை கிராமத்தில் வசிஷ்டேஸ்வரர் கோவிலில் தனி சந்நிதியில் குருபகவான் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அனைத்து சிவன் கோவில்களிலும் தென்கோஷ்டத்தில் சிவபெருமானின் ஞான வடிவமான ஸ்ரீ தட்சிணாமூர்த்தியே குருவாக பாவித்து, பக்தர்கள் வழிபடுகின்றனர்.ஆனால், திட்டையில் நவக்கிரக குருபகவானே ஸ்வாமிக்கும், அம்பாளுக்கும் இடையே தனி சந்நிதியில், தனி விமானத்தில் ராஜகுருவாக நின்று அருள்பாலிக்கிறார். அதனால், வெளிநாட்டினரும் திட்டைக்கு வந்து பரிஹார ஹோமங்கள் செய்து, குருபகவானை வழிபடுகின்றனர்.இங்கு ஆண்டுதோறும் குருபெயர்ச்சி விழா வெகுவிமர்சையாக நடக்கிறது. இதன்படி, வரும் 28ம் தேதி, ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு குருபகவான் பிரவேசிப்பதை முன்னிட்டு, குருபெயர்ச்சி விழா நடக்கிறது.இதுகுறித்து, திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் செயல்அலுவலர் கோவிந்தராஜ் கூறியதாவது:திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில், குருபெயர்ச்சி விழாவில், 12 ராசிக்காரர்களும் பயன்பெற வேண்டி, லட்சார்ச்சனை மற்றும் பரிகார ஹோமங்கள் நடக்கிறது.
ஒருவரின் ஜென்ம ராசியிலிருந்து 2, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் சஞ்சாரம் செய்யும்போது, குருபகவான் நற்பலன் தருவார் என்பது பொதுவான விதியாகும்.அதன்படி, குருபெயர்ச்சின்போது இரண்டாம் இடத்துக்கு வருவதால் ரிஷப ராசியினரும், ஐந்தாமிடத்துக்கு வருவதால் கும்ப ராசியினரும், ஏழாம் இடத்துக்கு வருவதால் தனுசு ராசியினரும், ஒன்பதாம் இடத்துக்கு வருவதால் துலாம் ராசியினரும், 11ம் இடத்துக்கு வருவதால் சிம்ம ராசியினரும் நற்பலன் பெறுவர்.ஆனால், ஜென்ம ராசியான ஒன்றாம் இடம் மற்றும் 3,4,6,8,10,12 ஆகிய இடங்களில் குருபகவான் சஞ்சாரம் நற்பலன் அளிக்காது. இதனால், முறையே மிதுனம், மேஷம், மீனம், மகரம், விருட்சிகம், கன்னி, கடகம் ராசியில் பிறந்தவர்கள் குருபகவானுக்கு பரிகாரம் செய்வது அவசியம். குருபெயர்ச்சியில் பரிகாரம் செய்து கொள்ளும் பக்தர்களுக்கு, திட்டை கோவிலில் ஜூன் 6ம் தேதி ஏகதின லட்சார்ச்சனை நடக்கும். இதற்கு, 300 ரூபாய் கட்டணம்.சிறப்பு பரிகார ஹோமங்கள் அடுத்த மாதம் ஏழாம் தேதி முதல் 10ம் தேதி வரை நான்கு நாட்கள் வேத விற்பன்னர்கள் தலைமையில், கோவிலில் நடத்தப்படும். நேரில் பங்கேற்கும் பக்தருக்கு தனிப்பட்ட முறையில் சங்கல்பம் செய்து, அர்ச்சனை பரிகாரம் செய்யப்படும். இதற்கு, 500 ரூபாய் கட்டணம்.மேற்கண்ட லட்சார்ச்சனை, குருபரிகார ஹோமங்களில் நேரில் வருபவர் கட்டணம் செலுத்தி பங்கேற்கலாம். நேரில் வர முடியாத பக்தர்கள், லட்சார்ச்சனைக்கு 300 ரூபாயும், ஹோமத்துக்கு 500 ரூபாயும் மணியார்டர் அல்லது "டிடி எடுத்து, தங்களது பெயர், ராசி, நட்சத்திரம் மற்றும் சரியான முகவரியை தெளிவாக எழுதி அனுப்பினால், தபால் மூலம் பிரசாதம் தவறாமல் அனுப்பி வைக்கப்படும்.இதனுடன், பூஜையில் வைத்த குருபகவான் உருவம் பொறித்த இரண்டு கிராம் வெள்ளி டாலர் மற்றும் குருபகவான் படம் அனுப்பி வைக்கப்படும். வரிசை முறையில் பெயர் பதிவு செய்து, உரிய முறையில் பிரசாதம் அனுப்பப்படும்.நிர்வாக அதிகாரி, வசிஷ்டேஸ்வரர் கோவில், திட்டை, 613 003, தஞ்சை மாவட்டம். போன் நம்பர்-04362 252858 மற்றும் மொஃபைல் நம்பர் 99407 20184 என்னும் முகவரிக்கு பக்தர்கள் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.