திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மே 2013 10:05
உடுமலை: உடுமலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருக்கல்யாண உற்சவம் இன்று நடைபெறுகிறது.திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், ஸ்ரீ வாரி ஸ்ரீஸ்ரீநிவாசா, ஸ்ரீ பத்மாவதி தாயார் திருக்கல்யாண உற்சவம் இன்று உடுமலை சிவசக்திகாலனி வரதராஜபெருமாள் கோவில்மைதானத்தில் நடைபெறுகிறது.தேனியில் திருக்கல்யாண உற்சவம் நிறைவடைந்தையடுத்து, நேற்று பெருமாள் உடுமலைக்கு வந்தார். உடுமலை அருகேயுள்ள பொன்னேரி கல்யாண மண்டபத்தில் எழுந்தருளிய பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வரவேற்பு அளிக்கப்பட்டது. முதற்கட்டமாக திருப்பதி பெருமாள் மூலவர் போன்ற சிலையுடன் கூடிய ரதம் வந்தது. சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பின், உற்சவர் சிலைகள் மண்டபத்திற்குள் கொண்டு செல்லப்பட்டன. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.விழாவையொட்டி, பொன்னேரி பகுதியில் இன்று பெருமாளுக்கு ஆறுகால பூஜைகள் மற்றும் திருமண சடங்குகள் நடைபெறுகின்றன. பின், திருமலா திருப்பதி தேவஸ்தானம் சார்பில் உடுமலை பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு மரியாதை செய்யப்படுகிறது.மதியம் 2:00 மணிக்கு ஏரிப்பாளையம் பகுதியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடம் ஸ்ரீ சடகோப ராமனுஜ ஜீயர் தலைமையில் பஞ்ச வாத்தியம் மற்றும் யானை,குதிரை ஊர்வலத்துடன், பஜனை குழுவினரின் பஜனை நிகழ்ச்சியுடன் பொதுமக்கள் என அனைவரும் ஊர்வலமாக வரதராஜ பெருமாள் மைதானத்திற்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 5:00 மணிக்கு மைதானத்தில் உள்ள அலங்கார மேடையில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும்.