பதிவு செய்த நாள்
27
மே
2013
10:05
காஞ்சிபுரம்: திருக்காலிமேடு கயிலாயநாதர் கோவிலில், இன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம், திருக்காலிமேடு, இந்திர தீர்த்தத்தின் வடக்கே, குபேர மூலையில், காமாட்சிஅம்பாள் சமேத கயிலாசநாதர் கோவில் உள்ளது. பழுதடைந்து காணப்பட்ட இக்கோவிலை, அப்பகுதி மக்கள், நன்கொடையாளர் உதவியுடன் புதிதாக கட்டி முடித்தனர். திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேகம் இன்று காலை, 6:00 மணி முதல், 6:30 மணிக்குள் நடைபெற உள்ளது.இதை முன்னிட்டு, கடந்த, 25ம் தேதி காலை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை மற்றும் மாலை, 6:00 மணிக்கு, வாஸ்து ஹோமம் நடந்தது.நேற்று காலை, 9:00மணிக்கு, கணபதி பூஜை, நவக்கிரஹ ஹோமம், கோ பூஜை, தன பூஜை, பிரம்பசுத்தி, கோபுர கலச ஸ்தாபனம், அங்குரார்ப்பனம், ரக்ஷா பந்தனம், யாக சாலை பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.இன்று, கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, அதிகாலை, 6:00 மணிக்கு, யாக சாலை பூஜை மற்றும் ஹோமமும், 6:30 மணிக்கு, கோபுர கும்பாபிஷேகமும், 7:00 மணிக்கு, கும்பாபிஷேக தீபாராதனையும் நடைபெற உள்ளது.