பதிவு செய்த நாள்
27
மே
2013
11:05
வத்தலக்குண்டு: குளிப்பட்டியில் பகவதி, காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம், 25 ம் ஆண்டு வெள்ளி விழாவும் இன்று கொண்டாடப்படுகிறது. வத்தலக்குண்டு ஒன்றியம், கோம்பைப்பட்டி ஊராட்சியில் மஞ்சளாறு, மருதாநதி ஆறு இணைந்து ஓடும் ஆற்றங்கரையில் அமைந்துள்ள குளிப்பட்டியில் பகவதி, காளியம்மன் கோயில் முதல் கும்பாபிஷேகம் 1989 ல் இதே நாளில் நடந்தது. இரண்டாவது கும்பாபிஷேகம் 2001 மே, 27 ல் நடந்தது. இன்று மூன்றாவது கும்பாபிஷேகமும் அதே நாளில் நடப்பது சிறப்பாகும். இதற்கான காப்பு கட்டுதல் நிகழ்ச்சி கடந்த 13 ல் நடந்தது. வெள்ளியன்று காலை செல்வவிநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில் திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று முன் தினம் காலை, முதல் கால யாகபூஜைகள் நாட்டாமை சுப்பையா, பெரியதனம் தியாகராஜன் தலைமையில் துவங்கின. காலையில் அனுக்ஞை தேவதா, அனுக்ஞை அனுமார், அணுக்ஞை புண்யாகவா, கணபதி, லட்சுமி, நவக்கிரக ஹோமங்கள், கோபூஜை, பூர்ணாஹூதி, தீபராதனை நடந்தது. மாலையில் விக்னேஸ்வர பூஜை, புண்யாவாஜனம், வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம், ரட்ஷாபந்தனம், கும்ப அலங்காரம் யாகசாலை பிரவேசம் நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை ஹோமங்கள், பூர்ணாஹூதி, விக்ரஹங்களுக்கு யந்திர பிரதிஷ்டை அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது. தொடர்ந்து மூன்றாம் கால பூஜை நடந்தன. இன்று காலை பரிவார மூர்த்திகள் விநாயகர், மாரியம்மன்,துர்க்கையம்மன், காவல்தெய்வங்கள் ஊர்க்காவலன், சந்திமரிச்சி வீரன் மற்றும் நவக்கிரங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இரண்டு நாட்களாக மூன்று நேரமும் நடந்த அன்னதானம் இன்றும் தொடர்கிறது. மாலை 4 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. பொங்கல் படைத்து வழிபாடு நடக்கிறது. கும்பாபிஷேகத்தை விஸ்வநாத சவாச்சாரியார் தலைமையில் குழுவினர் செய்கின்றனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை சென்னைவாழ் குளிப்பட்டி கிராமத்தினர் சார்பில் இளங்கோவன் தலைமையில் ஊர்பொதுமக்கள் செய்துள்ளனர்.