பதிவு செய்த நாள்
27
மே
2013
11:05
தஞ்சாவூர்: தஞ்சை டவுன் மாமாசாகிப் மூலை ஸ்ரீ சித்தி விநாயக பெருமான் கோவில் பக்தர்களிடம் பிரசித்தி பெற்று விளங்குகிறது. தஞ்சையில் மன்னன் ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோவிலுக்கு ஈசானிய பாகத்தில், மாமாசாகிப் மூலையில் சித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும் முத்துப்பல்லக்கில் விநாயக பெருமான் திருவீதியுலா விழா வெகுவிமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். இவ்விழாவை அரண்மனை மேலப்பூந்துருத்தி உஜ்வல் காடேராவ் சாகேப் தலைமையில், பக்தர்கள் நடத்தி வருகின்றனர். இதேபோல, நடப்பாண்டும் 69வது ஆண்டாக, முத்து பல்லக்கில் விநாயக பெருமான் திருவீதியுலா நடக்கிறது. இதன்படி, இன்று மூல நட்சத்திரத்தில் காலை ஐந்து மணிக்கு கணபதி ஹோமம், எட்டு மணிக்கு மஹாபிஷேகம், தீபாராதனை மற்றும் இரவு 10 மணிக்கு ஸ்ரீ சித்தி விநாயக பெருமான் ஸ்வாமி, புஷ்பாலங்காரத்துடன் முத்து பல்லக்கில், முக்கிய நான்கு வீதிகள் வழியாக திருவீதியுலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இத்தகைய வீதியுலாவின்போது, பிரபல நாதஸ்வர வித்வான் கோவிந்தராஜன் குழுவினர் இன்னிசை இசைக்கின்றனர்.