வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரம் ரேணுகாதேவி கோயில் உற்சவ விழாவில் பெண்களின் பொங்கல் வழிபாடு நடந்தது.இக்கோயிலின் வருடாந்திர திருவிழாவான உற்சவ விழா 9 நாட்கள் நடைபெறும். இதில் அம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பார்.இந்த பாரம்பரிய திருவிழாவில் பெண்களின் பொங்கல் வழிபாடும் நடைபெறும். இந்த ஆண்டு அதிகாலை அம்மனுக்கு அபிஷேகம் முடிந்தவுடன் மேளதாளங்கள் முழங்க வீடு வீடாக சென்று பெண்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்களின் பொங்கல் பானைகள் அம்மன் முன் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் பெண்கள் பொங்கல் வைத்தனர். பின் அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலையில் அப்பெண்கள் கோயில் முன் திரண்டு அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து பூஜை செய்தனர். பூஜைக்கு பின் இரவில் கோயிலில் கொடியிறக்கம் செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை கம்மவார் நாயுடு மகாஜன சங்க தலைவர் ரெங்கமன்னார், செயலாளர் ராகவன், பொருளாளர் விஜயகுமார் உட்பட நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.