பதிவு செய்த நாள்
28
மே
2013
10:05
திருப்பதி: திருமலையில், கடைக்காரர்கள், உள்குத்தகை விட்டு சம்பாதிப்பதால், திருப்பதி தேவஸ்தானத்திற்கு, மாதத்திற்கு, 8 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது என, தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு துறை கணித்துள்ளது. திருமலையில் உள்ள வியாபாரிகளுக்கு தேவையான கடைகளை தேவஸ்தானம் குத்தகைக்கு கொடுத்துள்ளது. அதன் மூலம் தேவஸ்தானத்திற்கு, மாதந்தோறும், 20 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது. திருமலை தேவஸ்தானம், 150 ஆண்டுகளுக்கு முன், 1,853 கடைகளை குத்தகைக்கு விட்டது. இக்கடைகளின் உரிமையாளர்கள், அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே, வியாபாரம் செய்ய வேண்டும் என்பது நிபந்தனை. ஆனால், கடை உரிமையாளர்கள், கடைகளை உள்குத்தகைக்கு விட்டு, நாள் ஒன்றுக்கு, 1,000 முதல் 5,000 ரூபாய் வரை வாடகை வசூலிக்கின்றனர். இதை கணக்கெடுத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு துறை, இதனால் தேவஸ்தானத்துக்கு மாதத்திற்கு, 8 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது என்பதை கண்டுபிடித்துள்ளது. இதையடுத்து, கடைகள் வாடகையை அதிகபட்சமாக, மாதத்திற்கு, 5 கோடி ரூபாய் வரை உயர்த்த, தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. மேலும், கடையின் உரிமையாளர்கள் மட்டுமே கடைகளில் வியாபாரம் செய்ய வேண்டும்; வேறு யாரும் வியாபாரத்தில் ஈடுபட்டால், நோட்டீஸ் அனுப்பப்படும்; அதற்கு சரியான பதில் அளிக்கவில்லை என்றால், கடைக்கு, "சீல் வைக்கப்படும் என, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தேவஸ்தானத்தின் அதிரடி நடவடிக்கையால், கடை உரிமையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
குத்தகை நிலம் மீட்பு: திருமலை -திருப்பதி தேவஸ்தானம், திருமலையில், கர்நாடக மாநில அரசுக்கு விருந்தினர் மாளிகை கட்ட, பல ஆண்டுகளுக்கு முன்பு, 7 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு அளித்தது. அதில், கர்நாடக அரசு, 3.5 ஏக்கர் நிலத்தில் விருந்தினர் மாளிகையையும், கல்யாண சத்திரத்தையும் கட்டி வாடகைக்கு விட்டுள்ளது. இதற்கு வாடகையாக, ஆண்டுக்கு, 1,116 ரூபாயை கர்நாடக அரசு செலுத்தி வருகிறது. இந்த குத்தகைக் காலம் சமீபத்தில், முடிவடைந்தது. குத்தகையை புதுப்பிக்க தேவஸ்தானத்தை, கர்நாடக மாநில அரசு அணுகியது. கட்டடம் உள்ள, 3.5 ஏக்கருக்கான குத்தகையை மட்டும் புதுப்பித்து, மீதம் உள்ள, 4.85 ஏக்கரை திரும்ப எடுத்துக்கொள்ள உள்ளதாக தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜு தெரிவித்தார்.