பதிவு செய்த நாள்
28
மே
2013
10:05
அழகர்கோவில்: மதுரை அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில், ரூ.2 கோடியில் திருப்பணிகள் செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம், தக்கார் வெங்கடாஜலம் தலைமையில் நடந்தது. இக்கோயிலுக்கு 2002ல் கும்பாபிஷேகம் நடந்தது. அடுத்தாண்டு மார்ச்சில் 12 ஆண்டுகள் முடிவடைகின்றன. அதற்குள் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து, நேற்று தக்கார் வெங்கடாஜலம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மீனாட்சி அம்மன் கோயில் இணை கமிஷனர் ஜெயராமன் பங்கேற்றார். கோயில் பிரகார மண்டபங்களில் சிற்ப, சுதை வேலைப்பாடுகள் செய்யப்படும். கோயில் முகப்பு பகுதியில் சுதை வேலைகள், மடப்பள்ளி, காலியாக உள்ள இடத்தில் சஷ்டி மண்டபம், திருமண மண்டபம் கட்டப்படும். புதிதாக சண்முகர் சன்னதி, யாகசாலை மண்டபம், ராஜகோபுரம், கருவறை கோபுரம் உட்பட 5 கோபுரங்களும் புதுப்பித்தல், கற்பகிரகம் மராமத்து, மூலஸ்தானத்தில் சுவர்ணபந்தன தகடு பதித்து, மருந்து சாத்துதல், விநாயகருக்கு உற்சவர் விக்ரகம் பிரதிஷ்டை, புதிதாக தங்க கொடிமரம் அமைத்தல் போன்ற பணிகள் நடக்க உள்ளன. கோயில் சார்பில் பஸ் ஸ்டாண்ட் அமைப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. தக்கார் வெங்கடாஜலம் கூறியதாவது: உபயதாரர்கள் மூலம் திருப்பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளோம். அரசின் உத்தரவு பெற்றவுடன் பணிகள் துவங்கும். ரூ.2 கோடிக்கு முதற்கட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க அறநிலையத்துறை முன்வர வேண்டும். பக்தர்கள் வருகை அதிகரித்தால் மட்டுமே கோயிலை மேம்படுத்த முடியும். அதை கருத்திற்கொண்டு, தங்கும் விடுதி, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், என்றார்.