பதிவு செய்த நாள்
28
மே
2013
10:05
கேரள மாநில மற்றும் தமிழ்நாட்டின் தென்மாவட்ட பக்தர்கள் அதிகளவு வரும் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், பல்வேறு அடிப்படை
கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கோவை மாவட்டத்தில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேண்டுதல் வைத்தால் நிறைவேறும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது போல் கோவில் வருமானமும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை 2011 முதல் ஜூன் 2012 வரை ஒரு பசலியில் உண்டியல், கட்டணச்சீட்டு, கடைகள் ஏலம் உட்பட மொத்த வருமானம் 6 கோடியே 88 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. இது தவிர 27 கோடி ரூபாய் கோவில் வைப்பு நிதியாக வங்கிகளில் உள்ளது. கோவிலில் தற்போது கருணை இல்லம், தடுப்புச்சுவர் உட்பட 2 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டு வளர்ச்சிப்பணிகள் நடைபெற உள்ளது. கோவிலுக்கு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருமானம் இருந்தும் கோவில் சார்பாக கல்வி நிறுவனங்கள் எதுவும் துவங்கப்படவில்லை என்பது பொதுமக்களின் மிகப்பெரிய குறையாக உள்ளது.
பழநியில் உள்ள முருகன் கோவில் சார்பாக கல்லூரியும், கோவை மருதமலை முருகன் கோவில் சார்பாக பள்ளியும் கட்டப்பட்டுள்ளதால் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். அதேபோல், உதவி ஆணையர் அந்தஸ்தில் உள்ள மாசாணியம்மன் கோவில் சார்பாக கல்லூரி கட்ட வேண்டும். கல்லூரி கல்வி ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. ஏழை மாணவர்களுக்கு உதவும் நோக்கில் மாசாணியம்மன் கோவில் சார்பாக கல்லூரி துவங்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. ஆன்மிக சுற்றுலாவில் முக்கிய இடம் பிடித்துள்ள கோவிலில், தேவையான வசதிகளை ஏற்படுத்தினால், பக்தர்கள் மனதிலும் கோவில் நிர்வாகம் இடம் பிடிக்கும்.