பதிவு செய்த நாள்
04
ஜூன்
2013
10:06
ஸ்ரீவைகுண்டம்: நவதிருப்பதிகளில் பிரதம திருப்பதியான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. நவதிருப்பதிகளில் பிரதம திருப்பதியான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 30ம் தேதிமாலை அலங்கார திருமஞ்சணத்தோடு துவங்கியது. தொடர்ந்து இரவு யஜமானவரணம், ஆசார்யவரணம், அனுக்ஜை, விஷ்வக்சேன ஆராதனம், புண்யாக வாசனம், பஞ்சகவ்ய சம்மேளனம், ரக்ஷாபந்தனம், மிருதீசங்கரஹனம், யாகசாலை ஆவாகானம், சுவாமிகள், யாகசாலை கூட்டத்திற்கு எழுந்தருளல் நடந்தது.தொடர்ந்து காலை, மாலை யாகசாலை பூர்ணாகுதி, வேதபாராயணம் கோஷ்டி நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை 4 மணிக்கு விஸ்வரூபதரிசனத்துடன் யாகசாலை துவங்கியது. 5 மணிக்கு மகா பூர்ணாகுதி, 6 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு நடந்தது. காலை 6.21 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. 6.30 மணிக்கு தீபாராதனை நடந்தது. காலை 9 மணிக்கு சுவாமி நம்மாழ்வார் பெரியசன்னதிக்கு எழுந்தருளி திருவராதனம், தளிகை அமுது செய்தல், அச்சதை ஆசிர்வாதம், கோஷ்டி மரியாதைகள் நடந்தது. இரவு சிறப்பு கருடசேவை நடந்தது.விழாவில் ஆழ்வார்திருநகரி எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள், திருக்குறுங்குடி ராமானுஜ ஜீயர் சுவாமிகள், நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன், முன்னாள் காவல்துறை தலைவர் மாசானமுத்து, முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ராஜப்பா, வெங்கிடாச்சாரி, டிவிஎஸ் மேலாளர்கள் ரெங்கநாதன், செல்வம், ஆலோசகர் முருகன், ஆர்யாஸ் நிறுவன அதிபர் பாபு மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், இந்திய கலாசார பண்பாட்டு அறக்கட்டளையின் டி.வி.எஸ்.நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.