பதிவு செய்த நாள்
04
ஜூன்
2013
10:06
திருப்பூர்: கோவிலுக்கு சொந்தமான, 80 கோடி ரூபாய் மதிப்பிலான, 24.42 ஏக்கர் நிலத்தை, அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா, கொண்டரசம்பாளையத்தில், வெங்கட்ரமண சுவாமி கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலுக்கு சொந்தமாக, நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. ஆனால், கோவிலில் ஒரு வேளை பூஜைக்கு கூட வழியில்லை. கோவிலுக்கு சொந்தமான நிலங்களை, அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து, அனுபவித்து வந்தனர். பலர், தங்கள் பெயருக்கு பட்டா மாறுதலும் செய்துவிட்டனர். கோவிலுக்கு சொந்தமாக, சித்தராவுத்தன்பாளையம் கிராமத்தில், 24.42 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு, 80 கோடி ரூபாய். இந்நிலங்களை மீட்க, ஐந்து ஆண்டுக்கு முன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்று, போலீஸ் பாதுகாப்புடன், அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆனந்த் தலைமையில், செயல் அலுவலர்கள் நந்தகுமார், யுவராஜ், சரவணபவன், சங்கரன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட அறநிலைய துறை ஊழியர்கள், கோவில் நிலங்களை மீட்டனர். கம்பி வேலி அமைத்து, அறிவிப்பு பலகைகளும் வைத்துள்ளனர். இதேபோல், தாராபுரம் பகுதியிலுள்ள மற்ற கோவில் நிலங்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.