பதிவு செய்த நாள்
17
ஜூன்
2013
10:06
அரியலூர்: சாக்கு பையில் கட்டப்பட்டிருந்த நிலையில், முத்துமாரியம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரியலூர் அருகே மேற்கு சீனிவாசபுரம் காட்டு பகுதியில் சாக்கு பையில் ஒரு கோவில் சிலை உள்ளதாக, போலீஸாருக்கு நேற்று காலை தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், அங்கிருந்த அம்மன் சிலையை எடுத்து வந்து, அரியலூர் தாசில்தார் முருகனிடம் ஒப்படைத்தார். அம்மன் சிலையுடன், சேத்தியாதோப்பு சுமங்கலி சில்க்ஸ் என்ற ஜவுளி கடையின் மஞ்சள் நிற துணி பையும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பிலுள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு தொடர்பு கொண்ட அரியலூர் தாசில்தார், இங்கு கிடைக்கப்பட்ட அம்மன் சிலை குறித்த தகவலை தெரிவித்தார். சேத்தியாதோப்பு கடைவீதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் இருந்த, பித்தளையால் உருவாக்கப்பட்ட அம்மன் சிலை காணாமல் போனதாகவும், அதுகுறித்து, கடந்த, 2013 ஜூன், 4ம் தேதி சேத்தியாதோப்பு போலீஸில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சேத்தியாதோப்பு போலீஸாரிடமிருந்து தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஒன்றரை அடி உயரமுள்ள முத்துமாரியம்மன் விக்ரகம் உரிய பாதுகாப்புடன், அரியலூர் தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்டவர்களிடம் முத்துமாரியம்மன் சிலை ஒப்படைக்கப்படும் என, அரியலூர் தாசில்தார் முருகன் கூறினார்.