நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிவத்தலங்களில் திருச்செங்கோடு புகழ்பெற்றது. இங்கு சிவ பெருமான் அர்த்தநாரீஸ்வரராக, பார்வதிதேவியை இடப்பாகத்தில் ஏற்று அருள்புரிகிறார். திருஞானசம்பந்தர் தேவாரத்தில் இத் தலத்தை கொடிமாடச் செங்குன்றூர் என்று குறிப்பிட்டு உள்ளார். மலை அடிவாரத்தில் உள்ள கோயிலில், வள்ளி தெய்வானையோடு முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். இவரது அழகைகண்ட அருணகிரிநாதர் பக்திபரவசத்தில் ஆழ்ந்து, இந்த முருகனின் அழகைக் காண இருகண்கள் போதாது. படைப்புக்கடவுளான பிரம்மா எனக்கு நாலாயிரம் கண்களைக் கொடுக்கவில்லையே என்று ஏங்குகிறார். செங்கோடனைக் கண்டு தொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே, என்று கந்தர்அலங்காரத்தில் இதுபற்றி குறிப்பிட்டுள்ளார்.