பதிவு செய்த நாள்
16
நவ
2025
06:11
அச்சிறுபாக்கம்; அச்சிறுபாக்கம் அய்யப்ப சுவாமி கோவிலில் புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம், இன்று விமரிசையாக நடந்தது.
அச்சிறுபாக்கத்தில் சென்னை –- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரம், அய்யப்ப சுவாமி கோவில் அமைந்துள்ளது.இங்கு கருப்பண்ண சுவாமி, சிறிய கருப்பண்ண சுவாமி, மாளிகைபுரத்தம்மன் துர்கா தேவி, விநாயகர், முருகன் மற்றும் நவகிரகங்கள் உள்ளிட்ட கோவில்களுக்கு திருப்பணிகள் நடந்தன. இதையடுத்து, மஹா கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து, யாகசாலை அமைக்க பந்தக்கால் நடப்பட்டது.
நேற்று காலை 9:00 மணியளவில் மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி, கோ பூஜை, நவகிரக ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. பின், இரண்டாம் கால பூஜை மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடந்தன. இன்று 5:30 மணிக்கு மங்கல இசை, நான்காம் கால பூஜை மற்றும் சங்கல்பம் நடந்தன. காலை 7:15 மணிக்கு யாகசாலையில் இருந்து கலசம் புறப்பட்டு, பின், 7:45 மணியளவில், யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரால், விமான கோபுர கலசம், கொடிமரத்திற்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. காலை 8:00 மணிக்கு விசேஷ அலங்காரம், மஹா தீபாராதனை, தீர்த்த பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். இன்று முதல் 48 நாட்கள், மண்டல அபிஷேக பூஜைகள் நடைபெறும்.