பதிவு செய்த நாள்
04
ஜூலை
2013
10:07
பழநி: பழநி இடும்பன் மலைக்கோவிலில், தண்ணீர் இல்லாததால், பூஜை நடத்துவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடிநீர் வசதியின்றி, பக்தர்கள் அவதிப்படுகின்றனர். பழநிக்கு, ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இவர்கள், முதலில், இடும்பன் கோவிலுக்கு சென்று வணங்கிவிட்டு, மலைக்கோவில் செல்வர். இடும்பன் மலை கோவில் பூஜைக்கு, கிணற்று தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். வறட்சியால் கிணறு வற்றிவிட்டது. இதனால், மலைக்கு தண்ணீர் கொண்டு செல்வதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. அபிஷேகத்திற்கு தண்ணீர் கிடைக்காததால், பூஜை முழுமையாக நடப்பதில்லை. அர்ச்சகர்கள் குடங்களில், அவ்வப்போது கொண்டு செல்லும் தண்ணீரில், பூஜை செய்யப்படுகிறது. கோவில் செயற்பொறியாளர் குமரேசன் கூறுகையில்,""இடும்பன் மலை அடிவாரத்தில், புதிய தண்ணீர் தொட்டிகள் கட்டும்பணி நடக்கிறது. லாரி மூலம், இத்தொட்டியில் தண்ணீர் நிரப்ப்பபடும். இங்கிருந்து இடும்பன் மலை கோவிலுக்கு, தண்ணீர் சப்ளை செய்யப்படும். இப்பணி, ஒரு வாரத்திற்குள் முடிக்கப்படும், என்றார்.