கல்விக்கு அதிபதியான ஹயக்ரீவமூர்த்தியிடம் அகத்தியர் தத்துவ ஞானத்தை உபதேசம் செய்யும் படி வேண்டினார். வேதம், தத்துவம் ஆகியவற்றை எடுத்துச் சொன்ன ஹயக்ரீவர் அவருக்கு, அம்பிகைக்குரிய ஆயிரம் திருநாமங்கள் அடங்கிய லலிதா சகஸ்ரநாமத்தையும் அருளினார். பரம ரகசியமான லலிதா சகஸ்ர நாமத்தை ஆர்வத்துடன் கேட்பவருக்கு மட்டுமே சொல்லவேண்டும் என்ற நிபந்தனையும் விதித்தார். இந்த வரலாறு பதினெட்டு புராணங்களில் கடைசி புராணமான பிரம்மாண்ட புராணத்தில் இடம்பெற்றுள்ளது. லலிதா சகஸ்ரநாமத்திற்கு பாஸ்கரராயர் என்பவர் உரை எழுதினார். பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர், வித்யா உபாசனை செய்தவர். ஸ்ரீசக்கரம் வரைந்து அதன் நடுவில் அம்பிகையை சூட்சுமமாக நிலைநிறுத்தி மந்திரங்களால் தேவியை வழிபடுவதற்கு வித்யா உபாசனை என்று பெயர். லலிதா சகஸ்ரநாமத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் மந்திர சக்தி கொண்டதாகும். இதனை பக்தியோடு ஜெபிப்பவர்கள் அம்பிகை அருளால் நல்வாழ்வு பெறுவர்.