துளசிசாளக்கிராமம் என்பது கண்டகிநதியில் உருவாகும் ஒருவகையான கல்லாகும். இதனை விஷ்ணுவின் அம்சமாகக் கருதி வழிபடுவர். வஜ்ரகிரீடம் என்னும் பூச்சி துளசி செடியை மட்டுமே உண்ணும் குணமுடையது. இப்பூச்சி சாளக்கிராம கல்லைக் குடைந்து அதில் சுருள்வடிவில் சக்கர ரேகைகளை வரைவதாக ஐதீகம். சாளக்கிராமக்கல் பல வண்ணங்களில் கிடைக்கிறது. வெண்மை நிறம் வாசுதேவ அம்சமாகவும், கருப்பு நிறம் விஷ்ணுவாகவும், பச்சை நிறம் நாராயணராகவும், மஞ்சள் நிறம் நரசிம்மராகவும், கருநீலம் கிருஷ்ணராகவும் கருதி வழிபடுவர். இதனை வழிபட்டவரை தீவினைகள் நெருங்க முடியாது. விஷ்ணுவின் வடிவமான சாளக்கிராமத்தை பூஜிப்பவர்கள் தினமும் தூய நீராலும், பாலாலும் அதனை அபிஷேகம் செய்து பட்டுத்துணியால் ஒற்றி எடுக்க வேண்டும். வெள்ளை அன்னம் அல்லது காய்ச்சிய பாலை பிரசாதமாகப் படைக்க வேண்டும்.