புதுக்கோட்டை: தென்னிந்தியாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோவில்களில் ஒன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி திருக்கோவில். இங்கு சிவபெருமான் மாணிக்கவாசகராக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். திருவாவடுதுறை அதீன நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி திருமஞ்சனத் திருவிழா கோலாகலத்துடன் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 4ம் தேதி திருக்கொடியேற்றுடன் ஆரம்பமாகியது. விழாவின் ஒவ்வொரு நாளும் வெள்ளி வாகனத்தில் மூலவர் சிவபெருமான் மாணிக்கவாசகராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக இன்று சிவபெருமான் இடப வாகனத்தில் காட்சியளிக்கிறார். 12ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது. விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக 14ம் தேதி உபதேச காட்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீன நிர்வாகம் மற்றும் விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.