பதிவு செய்த நாள்
18
ஜூலை
2013
10:07
முருகனின் ஏழாம்படை வீடாக கருதப்படுவது மருதமலை சுப்ரமணியசாமி கோவில். மேற்குதொடர்ச்சி மலையடி வாரத்தில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு, தமிழகம் உள்பட பல்வேறு வெளிநாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். தைப்பூசம், கந்தசஷ்டி, சூரசம்ஹார விழா, பங்குனி உத்திர விழா மற்றும் கிருத்திகை, வைகாசி விசாகம் உள்ளிட்ட விழாக்கள் வெகு சிறப்பாக நடப்பது வழக்கம். இந்நிலையில், கோவிலில் ராஜகோபுரம், கல்யாண மண்டபம் உள்பட பல்வேறு திருப்பணிகள் பலகோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு, கடந்த மார்ச் 18ம் தேதி கும்பாபிஷேக விழா நடந்தது. இதில், ராஜகோபுரம் எதிரே கிழக்குதிசையில் முருகனின் ஆறுபடைகளை குறிக்கும் வகையில் தனித்தனி மண்டபங்களுடன் கூடிய நடைபாதை படிக்கட்டுகள் அமைக்கப்பட்டது. இதில், ஒரு சில படிக்கட்டுகளின் மத்தியில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. மலைமீது கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை "பார்க்கிங்பகுதியில் நிறுத்திவிட்டு, இடது ஓரத்திலுள்ள படிக்கட்டு வழியே சென்று சாமியை தரிசித்து விட்டு, வெளியே ராஜகோபுரத்தின் வழியே புகுந்து கிரானைட் பதிக்கப்பட்ட படிக்கட்டுகளின் வழியே வெளியே செல்கின்றனர். இந்நிலையில், குறிப்பிட்ட படிக்கட்டுகளின் இடையே பதிக்கப்பட்ட கிரானைட் கற்கள் வளவளப்பாக இருப்பதால் கால்வழுக்கி கீழே விழுகின்றனர். குறிப்பாக, மழை பெய்யும் போது நடந்து வரும்போது, பெரியவர் முதல் சிறியவர் வரை எதிர்பாராமல் கால்வழுக்கி கீழே விழுந்து எழுந்து செல்கின்றனர். அதேபோல், வெயில்காலத்தில் கால் வைக்க முடியாத அளவுக்கு சுடுவதால் நடப்பதற்கே பெரும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து, பக்தர்கள் கூறியதாவது : பலலட்சம் ரூபாய் செலவில் ராஜகோபுரம் மற்றும் படிக்கட்டுகள் கட்டப்பட்டிருந்தாலும், படிக்கட்டு நடைபாதைக்கு மேற்பகுதிக்கு "தகர ஷீட் பொருத்தப்பட வேண்டும். இதனால், வெயில், மழை காலத்தில் பக்தர்களுக்கு பாதிப்பில்லாமல் இருக்கும். இல்லாவிட்டால், காலை, மாலை நேரங்களில் முதியோர், குழந்தைகளுக்கு பெரும் சிரமம்தான்,என்றனர். மருதமலை கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது : பக்தர்கள் தரப்பில் புகார் வந்ததன் பேரில், கோவில் துணை ஆணையருக்கு தகவல் தரப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கிரானைட் கற்களின் நடுவே நடந்து செல்லும்போது, "கிரிப் ஆக இருக்கும் வகையில் பணிகளை மேற்கொள்ள, கோவில்நிர்வாக பொறியாளருடன் ஆலோசிக்கப்பட்டு, பணிக்கான செலவு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது, என்றனர். - நமது நிருபர் -