Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கரன்கோவிலில் ஆடித்தபசு ... மூலநாதர் சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு மூலநாதர் சுவாமி கோவிலில் பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று கோயில்களில் ஆடித்தபசு விழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2013
10:07

தபசு என்றால் தவம் என பொருள்படும். அம்பாள், சிவ, விஷ்ணுவை சங்கரநாராயணராக வேண்டி தவமிருந்து அவரது காட்சியைப் பெற்ற நாளே ஆடித்தபசு திருநாள். இந்த விழா 12 நாட்கள் நடக்கும். அம்பாளுக்கான பிரதான விழா என்பதால், அம்பாள் மட்டுமே தேரில் எழுந்தருளுவாள். கடைசி நாளில் அம்பிகை தபசு மண்டபம் சென்று, கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள். மாலையில் சங்கரநாராயணர் இவளுக்கு காட்சி தருவார். அதன்பின் சங்கரலிங்க சுவாமி, யானை வாகனத்தில் சென்று அம்பாளுடன் இணைந்து கோயிலுக்குச் செல்வார். அப்போது, விவசாயிகள் விளைபொருட்களை அம்பாளுக்கு காணிக்கையாக அளிப்பர்.

ஆடி மாதத்தில்தான் அன்னை பார்வதி தவம் செய்து ஐயனை மீண்டும் அடைந்தாள். இதனை ஆடித் தபசு என சிறப்பாகக் கொண்டாடுகிறோம். சங்கர நாராயணர் கோயிலில் ஆடித் தபசு, பெரிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சங்கரனும் நாராயணரும் ஒன்று என்று காட்டும் இத்தலத்தில், தபசு இருந்து பலன் அடைந்தவள் அம்பிகை. அம்பிகையின் தவம் பலித்ததனால், பக்தர்களும் தங்கள் பிரார்த்தனை நிறைவேற இங்கு வந்து வேண்டிக்கொள்கிறார்கள்.

சங்கரன்கோவில் உருவான வரலாறு: நாக அரசர்களான சங்கன் சிவன் மீதும், பதுமன் திருமால் மீதும் பக்தி கொண்டிருந்தனர். இருவருக்கும் சிவன் பெரியவரா, திருமால் பெரியவரா என்ற வாதம் எழுந்தது. தீர்ப்பு வேண்டி பார்வதியிடம் முறையிட்டனர். இருவரும் சம சக்தி கொண்டவர்களே என்பதை அவர்களுக்கு தெரிவிக்க, இணைந்து காட்சி தரும்படி அம்பாள் தவமிருந்தாள். இதையடுத்து, இருவரும் சங்கரநாராயணராக காட்சி தந்தனர். பின்னர், சிவன், சங்கரலிங்கமாகவும் எழுந்தருளினார். நாகராஜாக்கள் இருவரும் சங்கரலிங்கத்தை வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் இந்த லிங்கத்தை புற்று மூடி விட்டது. நாகராஜாக்கள் அதனுள்ளேயே இருந்தனர். பக்தர் ஒருவர் இந்த புற்றை இடித்தபோது, உள்ளிருந்த நாகத்தின் வாலை வெட்டிவிட்டார். ரத்தம் வெளிப்பட்டது. அதிர்ந்தவர் புற்றுக்குள் பார்த்தபோது லிங்கத்தைக் கண்டார். தகவல், பாண்டிய மன்னனுக்கு சென்றது. லிங்கம் இருந்த இடத்தில் அவன் கோயில் எழுப்பினான். மதுரையில் இருந்து 120 கி.மீ., தூரத்திலுள்ளது சங்கரன்கோவில்.

கோமதி பெயர்க்காரணம்: சந்திரன் (மதி) போல பொலிவான முகம் கொண்ட அம்பிகை, இங்கு தவம் புரிய வந்தபோது, தேவலோக மாதர்கள் பசுக்கள் வடிவில் அவளுடன் வந்தனர். எனவே இவள், கோமதி என்று பெயர் பெற்றாள். ஆவுடையாம்பிகை என்றும் இவளுக்கு பெயர் உண்டு. ஆ என்றாலும் பசு தான். பசுக்களாகிய உயிர்களை ஆள்பவள் என்ற பொருளில் இவ்வாறு சொல்வர். திங்கள்கிழமைகளில் இவளுக்கு மலர் பாவாடை, வெள்ளிக் கிழமையில் தங்கப்பாவாடை அணிவித்து அலங்காரம் செய்கின்றனர். இங்கு அம்பாள் சந்நிதி முன்மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதை, ஆக்ஞா சக்கரம் என்கின்றனர். மனநோய், மனக்குழப்பம் உள்ளவர்கள் இந்த சக்கரத்தின் மேல் அமர்ந்தால், நோய் நிவர்த்தியாவதாக நம்பிக்கை.

சங்கரநாராயணர் சிறப்பு: சிவன், அம்பாள் சந்நிதிகளுக்கு நடுவில் சங்கரநாராயணர் சந்நிதி உள்ளது. சிவனுக்குரிய வலப்பாகத்தில் தலையில் கங்கை, பிறைச்சந்திரன், அக்னி, ஜடாமுடி, காதில் தாடங்கம், கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் ஆடை இருக்கிறது. திருவாசியில் நாக வடிவில் சங்கன் குடை பிடித்தபடி இருக்கிறான். திருமாலுக்குரிய இடப்பாகத்தில் நவமணி கிரீடம், காதில் மாணிக்க குண்டலம், மார்பில் துளசிமணி மற்றும் லட்சுமி மாலை, கையில் சங்கு, இடுப்பில் பீதாம்பரம் இருக்கிறது. இவர் பக்கமுள்ள திருவாசியில் நாகவடிவில் பதுமன் குடை பிடிக்கிறான். இந்த சந்நிதியில் காலை பூஜையில் துளசிதீர்த்தம் தரப்படும். மற்ற நேரங்களில் விபூதி தருவர். பூஜையின் போது வில்வம், துளசி மாலைகளை அணிவிக்கிறார்கள்.சிவன் அபிஷேகப்பிரியர். திருமால் அலங்காரப்பிரியர். எனவே திருமாலுக்கு உகந்த வகையில் சங்கரநாராயணர் அலங்காரத்துடன் காட்சி தருகிறார். இவருக்கு அபிஷேகம் கிடையாது. இச்சந்நிதியில் ஸ்படிக லிங்கமாக காட்சி தரும் சந்திரமவுலீஸ்வரருக்கே அபிஷேகம் செய்யப்படும். சிவராத்திரி, ஏகாதசி நாட்களில் உற்சவருக்கு சிறப்பு பூஜை நடக்கும். ஆடித்தபசன்று மட்டும் அம்பாளுக்கு காட்சி தர இவர் வெளியே புறப்பாடாகிறார்.

நாகத்தில் அமர்ந்த சிவன்: சுவாமி பிரகாரத்தில் வன்மீகநாதர் சந்நிதி இருக்கிறது. புற்று வடிவில் அமைந்த இச்சந்நிதியில் சிவன் சுயரூபத்துடன் காட்சி தருகிறார். தலைக்கு மேலே குடை பிடித்தபடி இருக்கும் நாகத்தின் மீது இவர் அமர்ந்திருப்பது அபூர்வ அமைப்பு. புற்றுக்குள் (வன்மீகம் என்றால் புற்று) இருப்பவர் என்பதால் இவருக்கு இப்பெயர். நாகதோஷம் உள்ளவர்கள் புற்று மீது மஞ்சள் தூவி வேண்டிக் கொள்கிறார்கள். இச்சந்நிதி எதிரில் பஞ்ச நாக சிலைகள் இருக்கிறது. பக்தர்கள் இச்சிலைகளுக்கு பாலபிஷேகம் செய்கிறார்கள்.

தீராத பல்வலிக்கு பிரார்த்தனை: சிவன் சந்நிதி கோஷ்டத்தின் (கருவறை சுற்றுச்சுவர்) பின்புறத்தில் லிங்கோத்பவர் இருப்பார். சில தலங்களில் திருமால் காட்சி தருவார். ஆனால் இங்கு யோக நரசிம்மர் இருக்கிறார். புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. பல் வலி உள்ளவர்கள் இவருக்கு அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

ஆடித்தபசு என்றால் என்ன?

சென்னை மாங்காடு காமாட்சி, திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் ஆகிய திருத்தலங்களில் அன்னை கோமதியை தவக்கோலத்தில் காணலாம். சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா பிரசித்தம். சங்கன், பதுமன் என்ற நாக அரசர்கள் சிவன் மற்றும் விஷ்ணு மட்டுமே உண்மை தெய்வங்கள் என அடம் பிடித்தனர். இதுகுறித்து அம்பிகையிடம் முறையிட்டனர். சிவனும், விஷ்ணுவும் ஒன்றே என்பதை நிரூபிக்கும் வகையில், அன்னை பார்வதிதேவி பூலோகத்திலுள்ள புன்னை வனத்துக்கு வந்தாள். சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி தர வேண்டும் என வேண்டி ஒற்றைக்காலில், ஊசிமுனையில் நின்று கடும் தவம் செய்தாள். அவளது இந்த திருக்கோலம் காண தேவர்களெல்லாம் பசுக்களின் வடிவில் வந்து தங்கினர். பசுக்களை ஆ என்றும் கோ என்றும் சொல்வர். ஆக்கள் தரிசித்ததால் இவள் ஆவுடையம்மாள் எனப்பட்டாள். அம்பாளே பூமிக்கு வந்துவிட்டதால், அவளது திருமுகம் மதி (நிலா) போல் பிரகாசித்தது. அமாவாசை எப்போது என்று கூட அறிய இயலாத நிலை ஏற்பட்டது.  இதன் காரணமாக அவளுக்கு கோமதி என்ற பெயரும் தேவர்களால் சூட்டப் பட்டது. மதி என்றால் புத்தி என்றும் அர்த்தம். ஒரு ஊசியின் மேல் ஒற்றைக்காலில் நிற்க வேண்டுமானால், எந்தளவுக்கு புத்திசாலித்தனம் வேண்டும்! இப்படி புத்திசாலித்தனத்தில் கோ (தலைவி) ஆக இருந்ததாலும், இவள் கோமதி எனப்பட்டாள். தவம் என்ற சொல்லை தபஸ் என்று சொல்வர். இதுவே பேச்சுவழக்கில் தபசு, தவசு என்று மாறிவிட்டது.

சங்கரன்கோவில் பாம்புகள் வழிபட்ட கோயில் என்பதால் இங்கு புற்று இருக்கிறது. புற்று மண்தான் பிரதான பிரசாதம். நோயுள்ளவர்கள் இந்த மண்ணை நீரில் கரைத்து சாப்பிடுகின்றனர். மேலும் வீடுகளில் பூச்சி, பல்லி, வயல்களில் பாம்புத் தொல்லை இருந்தால் மூலவர் சங்கரலிங்கனாருக்கு வேண்டிக் கொண்டு, அந்தந்த பூச்சிகளின் உருவங்களை வாங்கி உண்டியலில் காணிக்கையாக அளித்தால் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமநாதபுரம்; உலகின் முதன் முதலில் தோன்றிய சிவன் கோயில் என்றழைக்கப்படும்  ராமநாதபுரம் மாவட்டம் ... மேலும்
 
temple news
சென்னை; மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது இதில் ... மேலும்
 
temple news
கோவை; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை கும்பாபிஷேகம் நடப்பதால், ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar