பதிவு செய்த நாள்
24
ஜூலை
2013
10:07
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம், வேதகிரீஸ்வரர் மலையை சுற்றியுள்ள, அசைவ உணவகங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வரலாற்று சிறப்பு திருக்கழுக்குன்றத்தில், பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில், 7ம் நூற்றாண்டில், பல்லவ மன்னர்களில் புகழ்பெற்ற முதலாம் மகேந்திர வர்ம பல்லவன் காலத்தில் கட்டப்பட்டது. இத்தலம், சமயக்குரவர்கள் நால்வரால் பாடப்பட்டது. தீர்த்தமாக சங்கு தீர்த்தமும், தலவிருட்சமாக கதலி வாழை மரமும் உள்ளது. இந்த மலையை சுற்றி, 8 நந்திகள் உள்ளன. இயற்கை வளங்கள், மூலிகைகள் நிறைந்துள்ள, மலையிலிருந்து வரும் நீர், சங்கு தீர்த்த குளத்திற்கு வரும் வகையில், கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குளத்தில் நீராடி, மலைவலம் வந்து இறைவனை வழிப்பாட்டல், மன அமைதி பெற்று, நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
கிரிவலம்: இதனால், நாள்தோறும், காலை, 5:00 மணிக்கு, பக்தர்கள் குளத்தில் நீராடிவிட்டு மலையை சுற்றிவருகின்றனர். கார்த்திகை மற்றும் மார்க்கழி மாதங்களிலும், பவுர்ணமி நாட்களிலும், ஏராளமான பக்தர்கள் மலையை சுற்றிவந்து, இறைவனை வழிபடுகின்றனர்.
வேதமே மலையாக உள்ளதால் சமயக்குரவர்கள் மலைமீது கால் வைக்காமல் மலையை சுற்றிவந்து, இறைபதிகங்கள் பாடினர் என, கூறப்படுகிறது. சைவ நெறிகளின் படி அமைந்துள்ள வேதமலையை சுற்றியுள்ள பகுதிகளில், சிலர் அடிமனை வாடகை என்ற பெயரில், கோவில் நிலங்களை பெற்று, அங்கு, அசைவ உணவகங்களை நடத்தி வருகின்றனர்.
அதிகாரிகள் அலட்சியம்: இவற்றில் இருந்து வெளியேற்றப்படும் இறைச்சி கழிவுகளை, மலையில் கொட்டி விடுகின்றனர். இந்த கழிவுகளிலிருந்து வரும் துர்நாற்றத்தால், மலையைச் சுற்றி வரும் பக்தர்கள் அதிருப்தியடைகின்றனர். மலையைச் சுற்றியுள்ள அசைவ உணவகங்களை அப்புறப்படுத்த வேண்டும் என, பக்தர்கள் இந்து அறநிலையத் துறை அதிகாரிகளிடம் நேரடியாக தெரிவித்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை.
எதிர்பார்ப்பு: எனவே, மலையைச் சுற்றி உள்ள அசைவ உணவகங்களை மூட, மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து அறநிலையத் துறை ஆணையர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து, பக்தர்கள் கூறும்போது, "புனிதமான மலையை சுற்றி, பல ஆண்டுகளுக்கு முன் அசைவ கடைகள் இல்லை. தற்போது, வருமானத்தை எதிர்பார்த்து, அசைவ உணவகங்களுக்கு அனுமதி அளித்துள்ளனர். இந்த கடைகளை அப்புறப்படுத்தி, உரிமத்தை ரத்து செய்ய வேண்டும், என்றனர். இதுகுறித்து, இந்து அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ""மலையில் கழிவுகளை கொட்டியவர்கள் மீது, சமீபத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது, அவர்கள், மீண்டும் கழிவுகளை மலையில் கொட்டுவதாக புகார் வந்துள்ளது. இதனால், சட்டப்படி நடவடிக்கை எடுத்து, கடைகள் நிரந்தரமாக அப்புறப்படுத்தப்படும், என்றார்.