பதிவு செய்த நாள்
25
ஜூலை
2013
10:07
காஞ்சிபுரம்: மகாராஷ்டிரா மாநிலத்தில், ஐந்து கால்களுடன் பிறந்த கன்றுகுட்டிகள், காஞ்சிபுரத்திற்கு கொண்டு வரப்பட்டன. இவற்றை, பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டு சென்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில், பசுக்கள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. இவைகளில், சில பசுக்கள் ஐந்து கால்களை கொண்ட கன்றுகளை ஈன்றுள்ளன. பசுவின் உரிமையாளர்கள், கன்றுகள் பால் குடிப்பதை மறந்த பின், அதனை அருகில் உள்ள கோவில்களுக்கு, தானமாக வழங்குகின்றனர். கோவில் நிர்வாகமும், இவற்றை வளர்த்து வருகிறது. பக்தர்கள் இந்த கன்றுகளை வழிபட்டு செல்கின்றனர். தற்போது, அப்பகுதியில் உள்ள பசுக்கள், ஈன்றெடுத்த மூன்று கன்று குட்டிகளுக்கு, அதன் கழுத்து பகுதியில், கூடுதலாக ஒரு கால் வளர்ந்துள்ளது. இந்த கன்றுகளை, அங்குள்ள சாய்பாபா கோவில் நிர்வாகம் வளர்த்து வருகிறது. அதிசய கன்றுக் குட்டிகளை, மாநிலம் தோறும், கோவில் நிர்வாகம் அழைத்துச் செல்கிறது. இந்த கன்று குட்டிகள், நேற்று, காஞ்சிபுரத்திற்கு கொண்டு வரப்பட்டன. இங்குள்ள மார்க்கெட் பகுதியில், பொதுமக்கள் இந்த கன்று குட்டிகளை, பக்தி பரவசத்துடன் வணங்கி சென்றனர்.