குரங்கனி முத்துமாலை அம்மன் கோயிலில் விரைவில் ராஜகோபுரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2013 10:07
ஏரல்: குரங்கனி முத்துமாலை அம்மன் கோயில் ராஜகோபுரம் கட்டுவதற்கு அம்மன் உத்தரவு கிடைத்ததால் விரைவில் ராஜகோபுர பணிகள் துவங்கும் என குரங்கனி 60 பங்கு நாடார் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.ஏரல் அருகேயுள்ள குரங்கனி முத்துமாலை அம்மன் கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். தமிழகம் மட்டும் அல்லாது வெளி மாநிலங்களிலும் பக்தர்களை கொண்டுள்ள இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனிமாதம் நடைபெறும் திருவிழாசிறப்பு வாய்ந்ததாகும்.வரலாற்று சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் கடந்த 16ம் தேதி ஆனித்திருவிழா நடந்தது. இதையடுத்து கடந்த 23ம் தேதி 8ம் நாள் கொடைவிழா நடந்தது. அன்று இரவு சிறப்பு பூஜைகளுடன் ராஜகோபுரம் கட்டும் பணிக்கு அம்மன் உத்தரவிற்காக சிறப்பு வழிபாடு நடந்தது. கோயிலில் சென்னை வாழ் குரங்கனி நாடார் சங்கம், கோவை வாழ் குரங்கனி நாடார் சங்கத்தினர், குரங்கனி ஊர் 60 பங்கு நாடார் பொதுமக்கள் ஒன்று கூடி ராஜகோபுரம் கட்டுவதற்காக அம்மனிடம் உத்தரவு கேட்டனர். அம்மன் உத்தரவு கிடைத்ததால் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். ராஜகோபுர பணிகள் ரூபாய் 5 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் என்றும், அறநிலையத்துறை, அரசு விதிகளின் படியும், ஆன்மீக விதிகளின்படியும் அம்மனுக்கு 5 கோடி ரூபாய் செலவில் ராஜகோபுரம் கட்டுமான பணிகள் விரைவில் துவங்கும் என்றும், அது சம்பந்தமாக அனைவரும் கூடி ஆலோசனை செய்ய உள்ளதாகவும், குரங்கனி 60 பங்கு நாடார் பொதுமக்கள் தெரிவித்தனர்.