நான் ஏழையாயிற்றே! ஐந்து ரூபாய்க்கு மல்லிகைப்பூ வாங்கக் கூட வசதியில்லாத நான், தங்கப் பூவைப் பற்றி சிந்திக்க முடியுமா! அதிலும் ஆயிரம் தங்கப்பூ! என்பவர்கள் இதைப் படியுங்கள். சிவபெருமானுக்கு விருப்ப மானது வில்வார்ச்சனை. பிரதோஷத்தன்று ஒரு வில்வ இலையால் அர்ச்சித்தால், ஆயிரம் தங்கப்பூக்களால் பூஜித்த புண்ணியம் உண்டாகும். இந்த வில்வ இலையையும் காசு கொடுத்து வாங்க வேண்டாம். அநேகமான சிவன் கோயில்களுக்குள் வில்வமரம் இருக்கிறது. அதிலிருந்து உதிரும் இலைகளைக் கழுவி பூஜித்தாலே போதும். முற்பிறவியில் செய்த கொடிய பாவம்கூட வில்வ அர்ச்சனையால் நீங்கும். வில்வமரத்தில் திருமகள் நித்யவாசம் செய்வதாக ஐதீகம். வில்வ அர்ச்சனை மூலம் உலகிலுள்ள செல்வம் அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணிப் பதாக பொருள். நமஸ்தே பில்வதரவே என்ற மந்திரம் சொல்லி வில்வத்தை பறிப்பதோ, எடுப்பதோ நல்லது. அதர்வண வேதத்தில் வில்வத்திற்கு 108 சூக்த மந்திரங்கள் உள்ளன. இதனை சிவராத்தியன்று படிப்பது சிறப்பு. காளஹஸ்தி புராணத்தில் வில்வத்தின் மகிமை கூறப்பட்டுள்ளது. வில்வ இலை உதிர்ந்து கிடந்தால் மிதிக்காமல் நடக்க வேண்டும்.