பதிவு செய்த நாள்
07
ஆக
2013
10:08
பாலக்காடு: கேரளாவில் பெய்து வரும் கனமழையிலும், மறைந்த முன்னோர் ஆத்மா சாந்தியடைய, பல்லாயிரக்கணக்கானோர் தர்ப்பணம் செய்தனர். கேரளாவில், பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இருந்தபோதும், மறைந்த முன்னோருக்கு, தர்ப்பணம் செய்வதை எவரும் மறக்கவில்லை. இந்தாண்டும், இந்த நிகழ்ச்சி, மாநிலத்தின் பல்வேறு புகழ்பெற்ற கோவில்களில், நேற்று நடைபெற்றது. வழக்கத்துக்கு மாறாக, இந்தாண்டு, தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், பல கோவில் கரையோரங்களில் பலி தர்ப்பணம் நடத்த, அரசு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளதோடு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடும் செய்துள்ளது.
இருந்தாலும், பல்லாயிரக்கணக்கானோர், முன்னோர் ஆத்மா, சாந்தியடைய, தர்ப்பணம் செய்து வழிப்பட்டனர். புகழ்பெற்ற ஆலுவா சிவன் கோவில், பெரியாறு ஆற்றின் நடுவே உள்ளதால், இக்கோவில் கனமழையில் மூழ்கி உள்ளது. இதனால், இக்கோவில் கரையோரங்களில் நடக்கவிருந்த வழிபாடு நிகழ்ச்சி, மற்றொரு பகுதியில் நடந்தது. அதேபோல், மலப்புரம் மாவட்டத்தில், திருன்னாவாய நாவ முகுந்தர் கோவில் அருகேயுள்ள பாரதப்புழா கரையோரம், திருவனந்தபுரம் பரசுராமர் கோவில், திருச்சூர் மாவட்டத்தில், பாம்பாடி ஐவர் மடம், பாலக்காடு மாவட்டம், கல்பாத்தி விஸ்வநாதர் கோவில் ஆற்றங்கரையோரம் ஆகிய இடங்களில், நேற்று அதிகாலை முதல், ஏராளமானோர், பெற்றோர், உறவினர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.