Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கொக்கிரகுளம் முத்தாரம்மன் கோயிலில் ... ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவில் பட்டு! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2013
09:08

இன்று ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் மகிழ்வுடன் கொண்டாடுகின்றனர். இது ரம்ஜான் பெருநாள் என்றும், ஈகைத் திருநாள் என்றும், ஈதுல் பித்ர் என்றும் அழைக்கப்படுகிறது. ரமலான் நோன்பை, ஒரு மாதம் நோற்று, அதன்பின் ரமலான் மாதத்திற்கு அடுத்த மாதமான ஷவ்வால் மாதம் முதல் நாளில், ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ரமலான் மாதத்தில் ஏழை வரியாகிய ஜக்காத் நன்கொடையையும், ஸதக்கா என்ற தருமத்தையும், அதிக அளவில் வழங்கி, அதன் பின் ரம்ஜான் தினத்தன்று, ஈத்காவிற்கு ரம்ஜான் தொழுகையை நிறைவேற்ற செல்லும் முன்பு, "பித்ரா எனும் சிறப்பு நன்கொடையை ஏழைகளுக்கு கட்டாயமாக வழங்குவதால், இப்பண்டிகை ஈகைத் திருநாள் என்று அழைக்கப்படுகிறது.இப்பண்டிகையை, "ஈத் உல் பித்ர் என்றும் அழைக்கின்றனர். ஈத் என்பதற்கு திரும்ப திரும்ப வரும் மகிழ்ச்சி என்றும், பித்ர் என்பதற்கு தானம் தருமம் என்றும் பொருளாகும்.பொருட்களை தானம் செய்வதால், ஆண்டுதோறும் திரும்ப திரும்ப வருகின்ற மகிழ்ச்சியான நாள் தான், இந்த ரம்ஜான் பெருநாள்.பித்ரா என்ற நன்கொடையான, கட்டாயமாக ரம்ஜான் பண்டிகை அன்று காலையிலேயே ஏழைகளுக்கு வழங்குவதன் நோக்கம்; அன்று எந்த ஒரு மனிதனும் பசித்திருக்கக் கூடாது என்பது தான். ரமலான் மாதம் முழுவதும் பகல் பொழுதில் நோன்பிருந்து பசித்திருக்கும் பணக்காரனும், வறுமையால் நெடுநாட்கள் பசியோடு இருக்கும் ஏழையும், ரம்ஜான் நாளில் உண்டு மகிழ்கின்றனர். கொடுப்பவனும் மகிழ்கிறான்; பெறுபவனும் மகிழ்கிறான். அன்று, பசி என்பது யாரிடத்திலும் காணப்படுவதில்லை.

Default Image
Next News

இறைவனின் கட்டளைக்கு அடி பணிந்து, ரமலான் முழுவதும் நோன்பிருந்து, வணக்க வழிபாடுகளிலும் ஈடுபட்டு ஜக்காத், சதகா போன்ற தான, தருமங்களையும் செய்து, இறைவனின் அன்பிற்கு பாத்திரமான மனிதன், இதற்குரிய கூலியை, பயனை இறைவனிடமிருந்து பெறுகின்ற இந்நாள் ஒரு வெற்றித் திருநாள். வயலிலே உழைத்து அதற்குரிய பலனை உழவர்கள் அறுவடை நாளில் பெறுவதைப் போல் தங்கள் கடமைகள் ஆகிய நோன்பு, தொழுகை, ஜக்காத் ஆகியவற்றை ஈமான் எனும் இறை நம்பிக்கையோடு வெற்றிகரமாக நிறைவேற்றி, இறைவனின் திருபொருத்தத்திற்கு ஆளாகின்றனர். இறைவனின் அன்பிற்கு ஆளாகின்றனர். அவர்களுடைய தியாகங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன. பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அடியான் எனக்காகவே, பசித்திருந்து, நோன்பிருந்து தியாகம் செய்தான். அவனுக்குரிய கூலியை, நேரிடையாக நானே வழங்குவேன் என்று இறைவன் திருமறையில் குறிப்பிட்டிருக்கின்றான்.
பிற மாதங்களில் செய்யப்படும் நற்காரியங்களை விட, ரமலான் மாதத்தில் செய்யப்படும் நன்மைகளுக்கு, 70 மடங்கு அதிகமான பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுவதால், அதிகமான தான தருமங்கள் இம்மாதத்தில் வழங்கப் படுகின்றன. வணக்க வழிபாடுகளும், அதிகமாக நிறைவேற்றப்படுகின்றன. ரமலான் மாத நோன்பின் மாண்பே வணங்குங்கள்! வழங்குங்கள்! என்பதில் தான் அடங்கியிருக்கிறது.ஜக்காத் எனும் ஏழை வரியை வழங்குவது, ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சேமிப்பில் இரண்டரை சதவீதம் கணக்கிடப்பட்டு, அது, ஏழைகளுக்கு, தானமாக வழங்கப்பட வேண்டும். ஈத்துவக்கும் இன்பமே பேரின்பம். பொருள் ஓரிடத்தில் குவியாமல் தடுக்கும் பொருளாதார சீர்திருத்த முறை தான் ஜக்காத். பகல் முழுவதும் பசித்திருத்தல், இரவிலே விழித்திருந்து, வணக்க வழிபாடுகளிலே ஈடுபடுதல் போன்ற நற்செயல்களால், ஒருவனுடைய பாவங்கள் நீக்கப்படுகின்றன. மனிதன் புனிதமடைகிறான். அவனுடைய மனம் பண்படைகிறது.பசித்திருக்கும் நோன்பு, பட்டினி கிடப்பதற்காக அளிக்கப்படும் பயிற்சி அல்ல; அது, பண்பாடுகள் வளருவதற்காக அளிக்கப்படுகின்ற பயிற்சியாகும். ஏழைகளின் பசித் துயரை, பணக்காரர்களும் உணர்வதற்கு ரமலான் நோன்பு ஒரு காரணமாகிறது. ஏழைகள் மீது அவர்களுக்கு இரக்கம் உண்டாகிறது. மனிதாபிமானம் வளர்கின்றது. பசித்திருக்கும் போது, மனிதனுடைய இச்சைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. அவனுடைய சுயகட்டுப்பாடு வளர்கிறது. மனம் ஒரு குரங்கு என்பார்கள். இங்கும் அங்கும் அலைபாயும் மனம், ஒரு கட்டுப் பாட்டிற்குள் வருவதால் மனம் ஒருமைப்படுகிறது. ஆன்மிக உணர்வுகள் வளர்கின்றன.நோன்பின் போது, பிறரைப் பற்றிப் புறம் பேசுவது கண்டிக்கப்பட்டுள்ளது. அப்படி பேசுவதை கேட்பதும் தவறு என்று கூறப்படுகிறது. ஆடவர் பெண்டிரையோ, பெண்டிர் ஆடவரையோ இச்சையுடன் நோக்குவதும் தடுக்கப்படுகிறது. எனவே, நாவால் செய்கின்ற பாவங்களும், காதுகளால் செய்கின்ற பாவங்களும், கண்களால் செய்கின்ற பாவங்களும் தடுக்கப்படுவதால், நோன்பு, மனிதனை பாவம் செய்வதிலிருந்து பாதுகாக்கும் கேடயமாக அமைகின்றது.ரம்ஜான் பண்டிகை அன்று பிறசமய சகோதரர்களுக்கும் உணவு மற்றும் இனிப்பு வகைகளை அன்பளிப்பாக வழங்கி, பரஸ்பர அன்பை வளர்த்துக் கொள்கின்றனர். இதனால் சமூக நல்லிணக்கம் ஏற்படுகின்றது.
அல்ஹாஜ் டாக்டர் மேஜர் மு.ஜெய்லானி,டீன், முகம்மது சதக் கலை அறிவியல் கல்லூரி, சென்னை - 119.
நோன்பின் சிறப்புகள்: ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது, நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல், உங்கள் மீது (அது) விதிக்கப் பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம். (அல் குர் ஆன் 2:183)இஸ்லாத்தில், ஆண்டிற்கு இரண்டு பண்டிகைகளே உண்டு. அதில் ஒன்று, தியாகத் திருநாள், பக்ரீத் பண்டிகை மற்றும் இரண்டாவது ஈகைத் திருநாள், ரம்ஜான் பண்டிகை. ரம்ஜான் மாதத்தில் தான், நன்மை, தீமை ஆகியவற்றை பிரித்து அறிவிக்கும், திருக்குர் ஆன் இறக்கி அருளப்பட ஆரம்பமானதாக, திருக்குர் ஆன் 2:185 ஆவது வாசகம் குறிப்பிடுகிறது. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்கள், இம்மாதம் முழுவதும் நோன்பு நோர்க்கும் படி வலியுறுத்திச் செல்கிறது.இருப்பினும், நோய்வாய் பட்டோர் மற்றும் பயணத்தில் இருப்போர், விடுபட்ட நோன்பை மற்ற மாதங்களில் நிறைவு செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. வயோதிகர் மற்றும் தீரா நோய்களில் சிக்கியவர்கள் நோன்பை கடைப்பிடிக்க முடியாது. இத்தகையோர் விடுபட்ட நோன் பிற்கு பரிகாரமாக குறைந்த பட்சம், ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. (அல்குர் ஆன் 2:183)
நோன்பு நேரம்: விடியற்காலை முதல் மாலையில் அந்திசாயும் நேரம் வரையில் உண்ணாமலும், பருகாமலும் இருப்பதே நோன்பிருந்தல் என்பதற்கு உண்மையான அர்த்தமாகும். இதை அதிகாலை என்கின்ற வெள்ளை நூல், கருப்பு நூல் என்கின்ற இரவு தென்படும் வரையில் உண்ணுங்கள், பருகுங்கள். இரவு வரும் வரை நோன்பை பூர்த்தி செய்யுங்கள் என்று திருக்குர்ஆன் 2:186 வாசகம் கூறுகிறது. அதாவது, மாலையில், தொடுவானில் கருப்பாகத் தென்பட ஆரம்பிக்கும் முதல், விடியற்காலையில், வானத்தில் வெள்ளையாக தென்படும் வரையில் உண்ணலாம், பருகலாம். மற்ற நேரங்களில் உண்ணாமலும், பருகாமலும் இருக்க வேண்டும். நோன்பு நேரங்களில் மனைவியிடம் கூடுவதோ, சல்லாபம் கொள்வதோ கூடாது என்றும், இவ்வாசகம் கூறுகிறது. இரவு நேரங்களில் இதற்கு தடை இல்லை.
நோன்பின் நோக்கம்: இதுவே நோன்பைப் பற்றி திருக்குர் ஆன் தரும் விளக்கங்களாகும். இனி, நோன்பு கடமையாக்கப்பட்ட தன் நோக்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நோன்பைக் கொண்டு இறையச்சமுடையவர்கள் ஆகிவிடலாம் என்று சொல்லப்பட்டுள்ளது (2:183). இது காலம் காலமாக விதியாக்கப்பட்ட ஒன்று என்றும் சொல்லப்பட்டுள்ளது. மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும், ஏற்ற பின் விளைவுகளை அல்லாஹ் நிர்ணயித்துள்ளான். செயல்புரிவதற்கு, முழு சுதந்திரம் பெற்ற மனிதனுக்கு, அவனுடைய செயல்களின் விளைவுகளிலிருந்து தப்பிக்கவே முடியாது. தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் தீய செயல்களுக்கு, ஏற்ற பின்விளைவுகள் துயரம் மிக்கதாகவே இருக்கும். இதைப்பற்றி அச்சம் கொள்வதே இறையச்சம் என்பதாகும். நோன்பிற்கும், இறையச்சத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று, பலருடைய மனதில் சந்தேகங்கள் எழுலாம். ஒருவேளை உணவை உட்கொள்ளாததால், இறையச்சம் வந்துவிடுமா என்றும் பலர் கேட்கின்றனர்.
இறையச்சம்: ஒரு வேளை உணவைத் தவிர்த்து கொள்ளுதல் என்பது அல்ல கேள்வி. இயல்பான வாழ்க்கைமுறையை விட்டுவிட்டு, வாழ்க்கையின் பக்கம் வர, சமுதாய மக்களுக்கு அழைப்பு விடப்படுகிறது. அந்த மாறுபட்ட வாழ்க்கை என்பது, மனோ இச்சைப்படி வாழ்வதை விட்டுவிட்டு, அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்குக் கட்டுப்பட்டு வாழ விடப்படும் அழைப்பே ஆகும். அதன் ஒரு பயிற்சியாகத்தான் நோன்பு திகழ்கிறது. அதாவது, யார் அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வாழ முன் வருகின்றனர் என்பதை பரிசோதித்துக் கொள்வதே, நோன்பின் சிறப்பு அம்சமாகும். மறைமுகமாக ஒருவர் உணவருந்திக் கொண்டு, நோன்பிருப்பதாக சொல்லிக் கொள்ளலாம். ஆனால், இந்த உண்மை அல்லாஹ்வுக்குத் தெரிந்துவிடும் என்பதை, உணர்த்தத்தான் இந்த நோன்பு கடமையாக்கப்பட்டு உள்ளது.எனவே நோன்பை கடைப்பிடிப்பவர்கள், தாம், அல்லாஹ்வின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு வாழ முன்வருவதாக உறுதி கொள்கிறார். இந்தக் கட்டளையை ஏற்றுக் கொண்டால், மற்ற அறிவுரை களையும் ஏற்று கொள்ள முன் வருவதாகப் பொருள்படும். இப்படியாக, அனைவரும் இணைந்து அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு, வாழ்ந்தால் தலைசிறந்த சமுதாயத்தை உருவாக்கிவிடலாம். எனவே தான், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக, உலக அரங்கில் அல்லாஹ்வின் புகழை மேலோங்கச் செய்ய வேண்டும் என்று, திருக்குர் ஆன் 2:185 வாசகம் கூறுகிறது.
பொது வாழ்வு: நோன்பைப் பற்றி கூறுகையில் எவ்வாறு நோன்பு நேரங்களில் உண்ணாமல் இருக்கின்றீர்களோ, அவ்வாறே, வாழ்நாள் முழுவதும், பிறருடைய சொத்து செல்வங்களை அநியாயமாக உண்ணாதீர்கள் என்றும், திருக்குர் ஆன் 2:1888 வாசகம் அறிவுறுத்துகிறது. இவ்வாறே, நோன்பு மற்ற எல்லா அறிவுரைகளுக்கும், கட்டுப்பட்டு வர பயிற்சி அளிக்கிறது. இதைத் தவிர்த்து, இதிகாப் என்ற தனிப்பட்ட பயிற்சியைப் பற்றியும், 2:187 வாசகம் கூறுகிறது. அவ்வாறு பயிற்சியை மேற்கொள்பவர்கள் மனைவியுடன் கூடுவதை, தவிர்த்துக் கொள்ளவும் கூறுகிறது. அதாவது, இளைஞர்களை பயிற்சி முகாம்களுக்கு தனியே அழைத்துச் சென்று, இறைவழி காட்டுதலின் சிறப்புக்களையும், அவற்றை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பதை விளக்கியதாகவும், தற்காப்பிற்காக பயிற்சியை அளித்ததாகவும், வரலாற்றுச் சான்றுகள் அறிவிக்கின்றன.
ஈகைத் திருநாள்: இப்படியாக, மாதம் முழுவதும் நோன்பைக் கடைபிடித்து, ஒரு புதிய உலகை படைக்க அனைவரும் இணைந்து, சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்படுவதை குறிக்கும் வகையில், மாதம் முடிவில் முஸ்லிம் பெருமக்கள் திருநாளாக கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் முதல், அனைவரும் சந்தோஷங்களுடன் இருக்க வேண்டும் என்பதற்காக, இருப்போர், இல்லாதவர்களுக்கு பித்ரா என்கின்ற நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தொகையை அளித்து உதவுகின்றனர். எனவே தான், ரம்ஜான் பண்டிகை ஈகைத் திருநாளாக கொண்டாடப்படுகிறது.
- என்.ரூஹில்லாஹ்
நீ தானே உலகின் எல்லை: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக, ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார். நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் பிந்திய, 10 நாட்களில் நாங்கள் இறக்கும் வரையில் இதிகாப் இருந்து வந்தனர். மேலும், ரமலானின் பிந்திய 10 நாட்களில், "லைலத்துல் கத்ர் என்னும் இரவை தேடுங்கள் என்று கூறினர். அவர்களின் மரணத்திற்கு பின், அவர்களின் மனைவிமார்கள் இதிகாப் இருந்தனர்.ரமலானின் இறுதிப் பத்து நாட்களை, அல்லாஹ்வை வணங்குவதற்காக மட்டுமே, மஸ்ஜிதில் தங்குவது சுன்னதான இதிகாப் ஆகும். இதிகாப் என்றால், "தடுத்து கொள்ளுதல் எனும் பொருளாகும். உலக அலுவல்களிலிருந்து முற்றிலும் தன்னைத் தடுத்துக் கொண்டு, இபாதத்களில் மட்டுமே முழுமையாக ஈடுபடுவதாகும்.
இதிகாபின் நோக்கம், இறைவனுடன் உள்ளம் ஒன்றிவிடுவதாகும் என, இப்னு கய்யூம் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளனர். ஆண்கள் அவரவரது மஹல்லாப் பள்ளியிலும், பெண்கள் வீட்டின உள்பகுதியிலும் இதிகாப் இருக்க வேண்டும்.நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். எந்த மனிதர் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி யார் ஒரு நாள் இதிகாப் இருப்பாரோ, அவருக்கும் நரகத்திற்குமிடையே அல்லாஹுதஆலா மூன்று அகழிகளைத் திரையாக ஏற்படுத்துகிறான். அவை ஒவ்வொன்றின் தூரம் வானம், பூமிக்கிடையே உள்ள தூரத்தை விட அதிகமாகும்.ஆண்டு முழுவதும், படைப்பினங்களிடம் கொண்டிருந்த நெருக்கத்தை இதிகாப் இருப்பதன் மூலம், அல்லாஹ்விடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள நல்ல வாய்ப்பாகும். இறைவனுக்கு உள்ளம் ஒன்றி விடுவதற்கும், மேலும் அவனல்லாத நினைவுகளை உள்ளத்தி லிருந்து அகற்றிக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகிறது.
*ஜூம்ஆத் தொழுகை நடைபெறக்கூடிய மஹல்லாவின் பள்ளியில்தான், இதிகாப் இருக்க வேண்டும். வேறு மஹல்லாவில் இருக்கக்கூடாது.
*அவசியத் தேவையின்றி பிறரிடம் பேசக்கூடாது.
*பள்ளியை விட்டு வெளியே வரக்கூடாது.
*அதிகமான இபாதத்கள், திக்ரு. குர்ஆன் திலாவத், துஆவில் ஈடுபடவேண்டும். வீண்பேச்சு, விவாதம், புறம் பேச்சுக்கள் பேசுவதோ, கேட்பதோ கூடாது.
*இதிகாப் இருப்பவர், முற்றிலுமாக உலக அலுவல்களில் இருந்து நீங்கிக் கொள்ளவேண்டும்.அதிகம் தூங்குவதையும், ஓய்வெடுப்பதையும் தவிர்த்து, அதிகம் இபாதத்களில் ஈடுபடவேண்டும்.
*பெண்கள் அவரவர் வீட்டின் உள்பகுதியில், ஒரு தனி இடத்தை ஒதுக்கி இபாதத்தில் ஈடுபடுவது, பெண்களுக்கான இதிகாப் ஆகும். வீட்டு வேலைகளை விட்டும் ஒதுங்கி இருக்க வேண்டும். ரமலான் மாதத்தில் கடை 10 நாட்கள் நபிகர் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளியில் இதிகாப் இருந்துள்ளார். எனவே, அந்த 10 நாட்கள் பள்ளியில் இதிகாப் இருப்பது சுன்னத்தாகும்.இதிகாப் என்ற பெயரில் ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கக் கூடாது. தேவையற்ற பேச்சுக்களை அறவே பேசக்கூடாது. ஆகுமான பேச்சாக இருந்தாலும் குறைத்துக் கொள்வது நலம்.இதிகாப் இருப்பவருடைய விஷயத்தில், அவர் பாவங்களை விட்டும் பாதுகாக்கப்படுகிறார். நற்செயல்கள் அனைத்தையும் செய்பவரைப் போன்ற நன்மைகள் அவருக்கு எழுதப்படுகின்றன என, நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்.
- பி.அப்துல்லா பாஷா
வழிகாட்டும் ஒளி விளக்கு: நிச்சயமாக நாம் அதை (திருக்குர் ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர் என்ற இரவில் இறக்கினோம். மேலும், கண்ணியமிக்க இரவு என்ன என்பது உமக்குத் தெரியுமா? கண்ணியமிக்க (அந்த) இரவு, ஆயிரம் மாதங்களை விட மேலானதாகும். அதில் வானவர்களும், ரூஹும்ம் (ஜிப்ரீலும்) தன் இறைவன் கட்டளைப்படி ஒவ்வொன்றையும் செயல்படுத்துவற்காக இறங்குகின்றனர் (அந்த இரவு) சாந்தி (நிலவியுருக்கும்) அது விடியற்காலை தோன்றும் வரை (97:1-5).அல்பகரா அத்தியாயத்தில், 185ம் வசனத்தில் ரமலான் மாதம் எத்தகையதென்றால். அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளை கொண்டதாகவும், நன்மை தீமைகளை பிரித்தறிவிப்பதுமான அல்குர் ஆன் இயற்றியருளப் பெற்றது. ஆகவே, உங்களுக்குள் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர், அம்மாதம் நோன்பு நூற்க வேண்டும். எனினும், எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்தில் இருக்கிறாரோ (அவர் அக்குறிப் பிட்ட நாள்களில் நோன்பைப்) பின்வரும் நாள்களில் நோற்க வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதைப் நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை நாடவில்லை. குறிப்பிட்ட நாள்கள் (நோன்பைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நல்வழிகாட்டியதற்காக, அல்லாவின் மகத்துவத்தை நீங்கள் போற்றி, நன்றி செலுத்துவதற்காகவும் (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்). இந்த இறைக்கட்டளையை ஏற்ற நாம், ஒவ்வொரு ஆண்டும் புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கிறோம். நல்வழியை காட்டியதற்காக, அல்லாவுக்காக நன்றி செலுத்துகிறோம். இறையருளைப் பெற, மற்ற மாதங்களை விட, ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் கூட்டம் அலைமோதுவதை காணும் போது, அல்லாவுக்கு நன்றி செலுத்தாமல் எப்படியிருக்க முடியும்?
அல்லாவின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரமலான் மாதத்தில், சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. சைத்தான் களுக்கு விலங்கிடப்படுகின்றன. (நூல்: புகாரி)
லைலத்துல் கத்ர் இரவு எப்போது வருகிறது? இவ்விரவை, ரமலானின் கடைசி பத்து நாள்களில், ஒவ்வொர் ஒற்றைப்படை இரவுகளில், அதனைத் தேடுங்கள் என்று நபிகள் (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்: புகாரி)லைலத்துள் கத்ர் இரவில், நாயனே நிச்சயமாக நீ பிழை பொறுப்பவன். ஆதலால், என்னை மன்னிப்பாயாக என, கூற வேண்டும் என்று, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் லைரத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது முன்பாவம் மன்னிக்கப்படுகிறது. யார் ரமலானில், நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ, அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. (நூல்: புகாரி)நபி (ஸல்) அவர்கள் ரமலானின், கடைசி பத்து நாள்களில் இதிகாப் இருப்பார்கள். இந்த நாள்களில் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களுக்கென, மறைப்பு கட்டிக் கொண்டு, இரவில் விழித்திருந்து வணங்குவார்கள். தங்களது குடும்பத்தாரையும், நித்திரையிலிருந்து எழுப்பி விடுவார்கள். (நூல்: புகாரி)ரமலான் மாதக் கடைசி பத்து நாள்கள் ஒவ்வொன்றிலும், லைத்துல் கத்ரில் வணங்குவதாக, நிய்யத் செய்து கொண்டு, இரண்டு ரக்அத் தொழுவது நல்லோர்களது வழக்கம் மிகக் குறைந்தது இரண்டு ரக்அத். மேற்கொண்டு முடிந்த அளவு, அதிக ரக்அத் தொழலாம். ஒவ்வொரு ரக்அத்திலும் சூராபாத்திஹாவிற்குப் பின், இன்னா அன்ஸல்னாஹு ஒரு முறையும், குல் ஹுவல்லாஹூ அஹத் மூன்று முறையும் ஓதி, ஒவ்வோர் இரண்டு ரக்அத்திலும் சலாம் கொடுத்துவிட வேண்டும். சலாமுக்கு பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது, ஸலவாத் ஓத வேண்டும். பின் எழுந்து முடிந்த வரை, இரண்டிரண்டு ரக் அத்களாகத் தொழலாம்.லைலத்துல் கத்ரில் ஜிப்ரீல் (அலை) மற்ற வானவர்களுடன் இறங்குகிறார். பஜ்ர் நேரம் வரை அவர்கள் அல்லாஹ்வைத் திக்ர் செய்பவர்களுக்கும், வழிபாடு செயல்பவர்களுக்கும் சலாம் சொல்கின்றனர்.
இன்று ரமலான் மாதத்தில், லைலத்துல் கத்ர் இரவில் திருக்குர் ஆன் இறக்கப்பட்டது என்றும், அல்லாவின் கட்டளையை ஏற்று வானவர்களும் ஜிப்ரீல் (அலை) அவர்களும், பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள் என்பதை அறிகிறோம். மேலும், அல்லாவின் கட்டளைப் படி, ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று, ஸகாத்தையும் முறையாக கொடுத்து, ஐந்து வேளை தொழுகையும், தராவீஹ் (இரவுத் தொழுகை) அனைத்தையும் தொழுது, திக்ரு செய்து கொண்டிருக்கும் நல்லாடியார்களுக்கு, வானவர்கள் சலாம் சொல்கிறார்கள்.ஆக, லைலத்துல் கத்ர் இரவு மகத்துவமிக்க ஒளிரும் இரவு, ஏனெனில் இவ்விரவில் இறங்கிய அல்குர்ஆன் நல்லவற்றையும், தீயவற்றையும் சுட்டிக்காட்டி எச்சரிக்கை விடுத்து, மறுமையில் சொர்க்கம் செல்ல வழிகாட்டும் ஒளி விளக்காகத் திகழ்கிறது.
- சி.இர்ஷாத் அஹ்மத்
நன்மையை தரும் நான்காவது தூண்: இஸ்லாத்தின் தூண்களில் ஒன்று தான் ஜகாத். குர்ஆன் பல்வேறு இடங்களில் தொழுகையையும், ஜகாத்தையும் சேர்த்தே சொல்கிறது. ஜகாத் எந்த அளவுக்கு முக்கியமான வழிபாடு என்பதற்கு, இரண்டு குறிப்புகளே போதும். முதலாவது இஸ்லாத்தின் முதல் கலீபாவாக வரலாற்றில், நீங்கா இடம் பெற்று விட்ட அபுபக்கர் சித்திக் (ரலி) ஜகாத்துக்கு கொடுத்த முக்கியத்துவம்.
மூன்று பிரச்னைகள்: அபுபக்கர் (ரலி) ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்றதும், இரண்டு, மூன்று பிரச்னைகள் பேருருவம் எடுத்தன. ஒன்று அண்ணல் நபிகளாரின் மறைவுக்கு பின், பலர் இஸ்லாத்தை துறந்து முர்தத் ஆகிவிட்டனர். இவ்வாறு முர்தத் ஆனவர்களை மீண்டும் இஸ்லாமிய நீரோட்டத்தில் கொண்டு வருவதும், இந்தப் போக்கு மேலும் பரவாமல் கட்டுப்படுத்துவதும், இஸ்லாமிய அரசு, அப்போது சந்தித்து நின்ற மிகப் பெரிய சவால் ஆகும். இரண்டாவதாக அண்ணல் நபிகளாரின் மறைவைத் தொடர்ந்து, பலரும் தம்மைத் தாமே இறைவனின் தூதர் என்று அறிவித்துக் கொண்டு, சண்டித்தனம் செய்து கொண்டிருந்தனர். இந்தப் போலி தூதர்களை ஒடுக்குவதும், அரசின் மிகப் பெரும் பொறுப்பாக இருந்தது. மூன்றாவதாக முஸ்லிம்களில் சிலர் ஜகாத் கொடுக்க மறுத்தனர்.அபுபக்கர் (ரலி) மற்ற பிரச்னைகளை விட, ஜகாத் பற்றிய நெருக்கடிக்கே முன்னுரிமை கொடுத்தார். முர்தத் பிரச்னையை விட, போலி தூதர்கள் தலையெடுத்த விவகாரத்தை தீர்ப்பதை விட, தொழுகையையும் ஜகாத்தையும் பிரித்துப் பார்த்த முஸ்லிம்களை சீர்திருத்துவதற்குஅபுபக்கர் (ரலி) முன்னுரிமை கொடுத்தார். தொழுகையையும், ஜகாத்தையும் பிரித்துப் பார்ப்பவர்களுக்கும், ஜகாத் கொடுக்க மறுப்பவர்களுக்கும் எதிராக ஜிகாத் செய்வேன் என்று அபுபக்கர் (ரலி) பிரகடனம் செய்தார். இவ்வாறாக இஸ்லாமிய அரசு மேற்கொண்ட முதல் ஜிஹாத் ஜகாத்தை நிலைநிறுத்துவதற்காகவே மேற்கொள்ளப்பட்டது.அடுத்து இன்னொரு கோணத்திலும், ஜகாத்தின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொள்ளலாம். பொதுவாக, பாவங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். சில பாவங்கள் தொடர்பாக மனிதர்களுக்குத் தனித்தனியாகவே தண்டனை அளிக்கப்படும். வேறு சில பாவங்களுக்கோ கூட்டு ரீதியாக தண்டனை அளிக்கப்படும். ஒட்டு மொத்த சமூகத்தை கோழைத்தனம் தொற்றிக் கொள்ளும் என்றும், எதிரிகள் அதனை வேட்டையாடுவர் என்றும், அண்ணல் நபிகளார் (ஸல்) எச்சரித்திருக்கின்றார்கள். விபசாரத்தின் விளைவாக எய்ட்ஸ் போன்ற ஆட்கொல்லி நோய்கள் ஒட்டுமொத்த சமூகத்தையே பதம் பார்த்த அவலத்தை நாம் கண்கூடாகப் பார்த்திருக்கின்றோம்.
ஜகாத் கொடுக்க தவறினால்... : இதே போன்று சமுதாயத்தில், பெரும்பாலான மக்கள் ஜகாத் கொடுப்பதை தவிர்ப்பார்களேயானால், அந்தச் சமுதாயத்தை பஞ்சமும், பற்றாக்குறையும் சூழ்ந்து கொள்ளும் என்றும் நபிமொழிகளில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பஞ்சம் பண்டங்களின் பற்றாக்குறையின் வடிவில் தான் வர வேண்டும் என்பதல்ல. பொருளாதார முன்னேற்றத்திற்கானவழிவகைகள் சுணங்கிப் போகின்ற வடிவிலும், இந்தப் பஞ்சம் மக்களை தாக்கலாம். விளைச்சலில் அடி விழலாம் பொருளாதார தேக்கநிலை ஏற்படலாம். வசதியின்மைக்கும், இயலாமைக்கும் மக்கள் தள்ளப்படலாம்.வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், மக்கள் ஜகாத் கொடுக்க தவறுகிற போது, அதனால் ஏற்படுகிற துன்பம், தனி மனிதர்களை தாக்குவதாக இருக்காது. மாறாக ஒட்டுமொத்த சமூகமே பாதிப்படைகிற அளவுக்கு, அந்தத் துன்பம் கூர்மையாக இருக்கும்.இந்த வழிபாட்டை குறித்துச் சொல்வதற்கு, ஜகாத் என்கிற சொல்லை குர்ஆன் ஆள்கிறது. ஜகாத் என்பதற்கு தூய்மைப்படுத்துதல் என்று பொருள். அது தான் அதன் அசல் பொருள்.உடலைத் தூய்மைப்படுத்தும் போது, உடலிலிருந்து அழுக்கு களைந்தால் எவருமே வருத்தப்படமாட்டார்கள். என்னுடைய உடலில் ஒட்டிக் கொண்டிருந்த அழுக்கு அகன்று விட்டதே என்று, எவரும் துக்கப்பட மாட்டார்கள். இதே போன்று, நாம் அணிந்துள்ள உடையில் ஒட்டிக் கொண்டிருந்த அழுக்கு நீக்கப்பட்டாலும் எவரும் வருத்தப்பட மாட்டார்கள். அதே போன்று ஒருவருடைய பொருளில், பணத்தில், செல்வத்தில் சேர்ந்துள்ள அழுக்கை நீக்குவதைப் போன்றது தான் ஜகாத்தும். இதனால் தான் ஜகாத் எனப் பெயரிடப்பட்டது.உண்மையில் இது ஓர் அழகான, புனிதமான, பொருள் செறிவான சொல் ஆகும். ஏழை, எளிய மக்களுக்கு நிதியுதவி செய்வதற்கு இதனைவிட அழகான பெயர் கிடையாது. இதிலிருந்து இஸ்லாத்துக்கு, ஜகாத்துக்கு இருக்கிற சிறப்பையும், முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொள்ளலாம்.
ஜகாத் கொடுப்பது அவசியம்:பொதுவாக, ரமலான் மாதத்தில் தான், ஜகாத் கணக்கிடப்பட்டு கொடுக்கப்படுகிறது.ஜகாத்தைக் குறித்துப் பேசும் போது, ஆறு அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அவற்றின் விவரம் பின்வருமாறு:
*ஜகாத் தொடர்பாக ஷரீஅத் விதிக்கின்ற நிபந்தனைகள்
*ஜகாத் கட்டாயமாகின்ற பொருள்கள்
*ஒருவர் மீது ஜகாத் கடமையாவதற்கான குறைந்தபட்ச அளவு
*ஜகாத்தின் அளவு
*ஜகாத்தை கொடுப்பதற்கான வழிமுறைகள்
*எங்கு, எப்படி, எவருக்கு ஜகாத் தரப்பட வேண்டும் என்பதற்கான விதிமுறைகள்
ஜகாத் ஒருவர் மீது எப்போது கடமையாகிறது?அவர் சுய புத்தி கொண்டவராக, வயதுக்கு வந்தவராக இருத்தல் வேண்டும். அதாவது குழந்தைகள் மீதும், சுயபுத்தி இல்லாத பைத்தியங்கள் மீதும், ஜகாத் கடமை அல்ல. ஜகாத் ஒரு வழிபாடு ஆகும். இறைவனை வழிபட்டே ஆக வேண்டும் என்ற கட்டாயம் குழந்தைகளுக்கும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இல்லை. எனவே, குழந்தைகள் அணிகின்ற நகைகள் மீதும், குழந்தைகளின் பெயரில் எடுக்கப்பட்ட பிக்சட் டெபாசிட் மீதும் ஜகாத் கடமை இல்லை. (பிக்சட் டெபாசிட் செய்வதால், கூடுதலாக சேர்கின்ற வட்டி ஹாரமானதாகும். அதனை நற்கூலியை எதிர்பார்க்காமல், ஸதகா செய்து விட வேண்டும்) இங்கு இன்னொன்றும் கவனித்தக்கது. பிற்பாடு தேவைப்படுகின்ற நேரத்தில், செலவுக்கு ஆகும் என்கிற எண்ணத்தில் குழந்தைகள் பெயரில், பிக்சட் டெபாசிட் எடுக்கப்பட்டிருந்தால், அதன் மீது ஜகாத் கடமை ஆகும். ஆனால், குழந்தைகளுக்காக, குழந்தையின் பெயரில் எடுக்கப்படுகின்ற பிக்சட் டெபாசிட் மீது ஜகாத் கடமை ஆகாது.ஒருவரிடம் உள்ள பொருள், சொத்து, பணம் ஆகிய வற்றின் மீது அவருக்கு முழு உரிமை இருத்தல்வேண்டும். எல்லாமே அவருடைய பொறுப்பில் இருத்தல் வேண்டும். விரும்பினால், விரும்பிய நேரத்தில் விரும்புகின்ற அளவுக்கு, அதிலிருந்து செலவிடும் உரிமை அவருக்கு இருக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்;  உலகில் அமைதி, செழிப்பு நிலவ வேண்டி, சத்ய சாயி நிறுவனங்கள் சார்பில் ராமேஸ்வரத்தில்  ... மேலும்
 
temple news
புதுச்சேரி: கருவடிக்குப்பம் அரிச்சந்திரன் கோவிலில் 108 சங்காபிஷேகம் கணபதி ஹோமத்துடன் நேற்று ... மேலும்
 
temple news
இளையான்குடி: இளையான்குடி மாறநாயனார் குருபூஜை விழாவில் நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் கலந்து ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சதுர்த்திப் பெருவிழாவை முன்னிட்டு நடந்த ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே, அமராவதி ஆற்றின் கரையில், பழமையான அம்மன் சிலை கண்டறியப்பட்டுள்ளது. உடுமலை வரலாற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar