பதிவு செய்த நாள்
12
ஆக
2013
10:08
சென்னை:""பஜனை போட்டி, மாணவ, மாணவியருக்கு இறைபக்தி, நல்லொழுக்கத்தை கற்று தருகிறது, என, ஆடிட்டர் நாராயணசாமி பேசினார். தமிழ்நாடு பிராமணர் சங்கம், மந்தைவெளி கிளையின், 29 வது ஆண்டு விழா மற்றும், 22 வது ஆண்டின் பள்ளிகளுக்கு இடையேயான பஜனை போட்டியின் துவக்க விழா சென்னை அடையாறில் நேற்று நடந்தது.சுப்பிரமணியன் வரவேற்றார். கே.ஆர்.சீனிவாசன் தலைமை வகித்தார். போட்டியை தமிழ்நாடு பிராமணர் சங்க மாநிலத் தலைவர் ஸ்ரீராமன் துவக்கி வைத்து பேசுகையில், ""கடந்த, 22 ஆண்டுகளாக, பள்ளிகளுக்கிடையே பஜனை போட்டியை, சிறப்பான முறையில் மந்தைவெளி கிளை நடத்தி வருகிறது. சங்கீதம் மூலம் இறைவனை அடையலாம் என, தியாகராஜ சுவாமிகள் பாடினார். மனிதர்களின் கவலையை மறக்க வைக்கும் மருந்தாக இசை விளங்குகிறது. இந்த பஜனை போட்டியில் பங்கெடுத்துள்ள பலர், சங்கீத வித்வான்களாக உருவாகியுள்ளனர், என்றார்.ஆடிட்டர் ஜி.நாராயணசாமி பேசுகையில், "பஜனை போட்டி மாணவ, மாணவியருக்கு இறை பக்தி, நல்லொழுக்கம், நாகரிகம், பண்பாடு ஆகியவற்றை கற்று தருகிறது. பிறருக்கு சேவை செய்வதன் மூலம் நாம் நன்றாக இருக்கலாம். நமது குடும்பமும், தேசமும் நன்றாக இருக்கும் என்றார். விழாவில், அடையாறு தர்ம பரிபாலன சபாவின் நிர்வாகி சீனிவாசராவ், ஜெயராமன், ஆலங்குடி வெங்கட்ராமன், சுரேஷ், பத்மாகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர். பஜனை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.