திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் மதுரைவீரன் கோவிலில் ஆடித்திருவிழா நடந்தது.திருக்கோவிலூர், மந்தக்கரை வீதியில் உள்ள மதுரைவீரன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 9ம் தேதி நிறைமணி உற்சவத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தென்பெண்ணை ஆற்றில் இருந்து சக்திக் கரகம் அழைத்து வரப்பட்டது.மதியம் 12:00 மணிக்கு வேண்டுதல் உள்ள பக்தர்கள் கூழ் எடுத்துவந்து மதுரைவீரனுக்கு படையல் வைத்து பக்தர்களுக்கு விநியோகித்தனர். மாலை 6:00 மணிக்கு சந்தப்பேட்டை நல்லதண்ணீர் குளத்தில் இருந்து குதிரையில் மதுரைவீரன் அழைத்துவரும் வைபவம் நடந்தது.இன்று இரவு 8:00 மணிக்கு பொம்மி சிறையெடுத்தல் நிகழ்ச்சி பாரம்பரிய முறைப்படி நடக்கிறது. நாளை இரவு கள்வரை கருவறுத்து, வெள்ளையம்மாளை சிறையெடுத்தல் நிகழ்ச்சியும், 14ம் தேதி இரவு சுவாமி வாணவேடிக்கையுடன் வீதியுலாவும் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை மந்தக்கரை, தெப்பக்குளத்தெரு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.