பதிவு செய்த நாள்
19
ஆக
2013
11:08
திருப்பூர்: அம்மாபாளின் ஒன்பது அவதாரங்களும், திருப்பூருக்கு வந்ததுபோல், சென்னை ஸ்ரீதேவி மிருத்திகா நாட்டியப்பள்ளி மாணவியரின் நாட்டிய நாடக நிகழ்ச்சி அமைந்தது. திருப்பூர் ஷண்முகானந்த சங்கீத சபா, ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் "ஜனனி ஜகத் ஜனனி நாட்டிய நாடக நிகழ்ச்சி, ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடத்தப்பட்டது. ஷண்முகானந்த சங்கீத சபா தலைவர் வீரராகவன் துவக்கி வைத்தார். சென்னை ஸ்ரீதேவி மிருத்யாலயா நாட்டியப் பள்ளி மாணவியர், அம்பாளின் ஒன்பது அவதாரங்களையும் பரதக்கலை மூலம் வெளிப்படுத்தினர். எப்போதெல்லாம் தர்மம் அழிந்து, அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம், அசுரர்களிடமிருந்து தேவர்கள், முனிவர்கள், மனிதர்களை காத்து ரட்சிக்க, தாயார், பல்வேறு அவதாரங்களை நிகழ்த்தியுள்ளார். காணற்கரிய அம்பாளின் அற்புதமான ஒன்பது அவதாரங்களும், நாட்டிய நாடக நிகழ்ச்சி மூலம், திருப்பூர் மக்கள் காண முடிந்தது. "ஜனனி ஜனனி நமோஸ்துதே என்ற பாடலுடன் துவங்கிய அந்நிகழ்ச்சியில், அம்பாளின் ஒன்பது அவதாரங்களை இங்கே சிருஷ்டிக்கிறோம் என விளக்கும் வகையில், தேவலோக அப்சரஸ்கள் போல்வந்த நாட்டியப்பள்ளி மாணவியர் ஒன்பது பேர், நாட்டிய நாடகத்துக்கு அடியெடுத்துக் கொடுத்தனர்.
முதலில், நித்ராதேவி அவதாரம்; அடுத்து, கடல் கடைந்தபோது பிறந்த தேவாமிர்தத்தை புசிப்பதில், அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் இடையே நிகழ்ந்த போட்டியை சமரசம் செய்து, தேவர்களுக்கு அமிர்தம் வழங்கிய, மோகினி அவதாரம்; தான் என்கிற மமதையில் தேவர்களையும், அசுரர்களையும் நசுக்கிய மகிஷாசூரனை வதம் செய்த மகிஷாசூரமர்தினி; சண்ட முண்டர்களை வதம் செய்ய, சண்டிகையாகவும், சாந்த ஸ்வரூபினியான அன்னை மகாகாளியாகவும் அவதரித்து, அசுரர்களை துவம்சம் செய்கிறாள்; சகல லோகங்களையும் காத்தருள அம்பாளாக அவதரிக்கிறாள். அடுத்து, வண்டாசூரனை வதம் செய்ய லலிதாம்பிகை; துஷ்ட அரக்கர்களை அழிக்க துர்காலட்சுமி; வானோரை காத்து ரட்சிக்க, வாராகி அவதாரம். இப்படி, அசுரர்கள் அக்கிரமங்கள் அதிகரிக்கும்போது, அம்பாள் வெவ்வேறு வடிவங்களில் அவதரித்து, அசுரர்களுடன் போரிட்டு, வெற்றி கொண்ட காட்சிகளை, 43 மாணவியர், பரதக்கலை மூலம் தத்ரூபமாக வெளிப்படுத்தினர். தேவ-அசுர யுத்தம், அம்பாளின் கோபம் போன்றவற்றை, பரதநாட்டிய மாணவியர் கண்களிலும், தங்கள் ஆன்ம பலத்திலும் பார்வையாளர்கள் முன் வெளிப்படுத்தி, அனைவரையும் பிரமிக்க வைத்தனர். இறுதியில், ஒன்பது தேவியர், சிவன், பிரம்மா, விஷ்ணு, லட்சுமியர் புடை சூழ, தேவர்களும், அசுரர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும் பூமாரி சொரிய, அம்பாள் தர்பார் நடத்தினார். இக்காட்சியை பார்த்தவர்கள் அனைவரும், அம்பாளே மனமிறங்கி திருப்பூருக்கு வந்ததுபோல், மனதில் கசிந்துருகி, வணங்கினர்.