பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயிலில் தங்கத்தேர் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஆக 2013 11:08
கடையநல்லூர்: பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயில் தங்கத்தேர் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் மலைப்பாதை அமைக்கப்பட்டு கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் அதிகளவில் வந்து செல்கின்றனர். இதனிடையில் பக்தர்களின் 7ம் படைவீடாக வழிபட்டு வரும் பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் தங்கத்தேர் அமைத்திட வேண்டுமென பக்தர்கள் வலியுறுத்தி வந்த நிலையில் இதற்கான பணிகள் உபயதாரர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர் ஓடுவதற்கான ஓடுதளம் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தங்கத்தேருக்கான மரத்தேரும் உருவாக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் தேரில் செப்பு தகடுகள் பொருத்தியிருந்த பணியினை தமிழக இந்து சமய அறநிலையத்துறை செந்தூர்பாண்டியன் பார்வையிட்டு, கோயிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் தங்கத் தேர் பணிகளையும் பார்வையிட்டார். இதனையடுத்து தற்போது கோயிலில் தங்கதேர் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வரும் விநாயகர் சதூர்த்தியன்று தங்கத்தேரை இயக்கிடும் வகையில் பணிகள் மும்முரமடைந்துள்ளது. தங்கத்தேர் பணிகுறித்து முன்னாள் திருப்பணிக்குழுதலைவர் அருணாசலம் கூறுகையில், ""திருமலைக்கோயில் தங்கதேர் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தங்கத் தேரினை சிறப்பிக்கும் வகையிலும், பக்தர்களின் வேண்டுகோளையடுத்தும் தேரில் பக்தர்களுக்கு காட்சி தரும் முத்தையனுக்கு தங்க அங்கியும் அணிவிப்பதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் 9ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று பக்தர்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றும் வகையில் கோயிலில் தங்கத்தேர் ஓடும் வகையில் அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.