கருப்பர் கோவிலில் வழிபடும் உரிமை: பொதுமக்கள் முறையீடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03செப் 2013 10:09
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே உள்ள கருப்பர் கோவிலில் வழிபடும் உரிமையை தட்டிப்பறிக்கும் முயற்சியை முறியடிக்கவேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் தாழ்த்தப்பட்ட மக்கள் முறையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அடுத்த கோட்டூர் கிராமத்தில் அருள்மிகு சுந்தரநாயகி அம்மன் கோவில் உள்ளது. இதன் அருகில் கல் மண்டபத்துடன் கூடிய சின்னகருப்பர், பெரியகருப்பர் கோவில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறையின் பராமரிப்பில் உள்ள இந்த கருப்பர் கோவிலில் அப்பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிடர் இன மக்கள் ஆண்டாண்டு காலமாக வழிபட்டு வருகின்றனர். கருப்பருக்கு பூஜை செய்தல், திருவிழா நடத்துதல், கிடா வெட்டுதல், சாமியாடி குறிசொல்லுதல் என அனைத்து வழிபாட்டு முறைகளையும் அவர்களே செய்துவருகின்றனர். இக்கோவிலுக்கு அதே கிராமத்தில் நஞ்சை நிலம் உள்ளது. இதில் விவசாயம் செய்து கிடைக்கும் வருமானத்தை வைத்து நாள்தோறும் ஒருகால பூஜை நடக்கிறது. சின்னையா அறங்காவலராகவும், நல்லதம்பி பூசாரியாகவும், சோலை, ஆண்டி ஆகியோர் சாமியாடிகளாகவும் உள்ளனர். வழிபாட்டு முறைகளில் இதர சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தலையிடுவதில்லை. எங்கள் சமுதாயத்தினரை புறக்கணித்துவிட்டு திருப்பணி என்ற பெயரில் கருப்பர் கோவிலை தன்வசப்படுத்த அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர்(மறவர்) முயற்சித்து வருகின்றனர். இவை எங்களது வழிபாட்டு உரிமையை பறிப்பதாக உள்ளது. எனவே, கோட்டூர் கருப்பர் சுவாமி கோவிலில் வழிபடும் உரிமையை தட்டிப்பறிக்கும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என அக்கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் இன மக்கள் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நேற்று மாவட்ட கலெக்டரை சந்தித்து முறையிட்டனர். இதுகுறித்த கோரிக்கை மனுவுடன், கருப்பர் சுவாமி கோவில் ஆதிதிராவிடர் இனத்தவர்களுக்கு பாத்தியப்பட்டது என்பதற்கான அரசு ஆவணங்களின் நகல்களையும் இணைத்திருந்தனர். இதையும் மீறி மாற்று சமூகத்தினர் கோவிலை அபகரிக்க முயன்றால் உரிமைக்காக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகம் நேற்று காலை பரபரப்புக்குள்ளானது.