திருமலைக்குமாரசுவாமி கோயில் தங்கத் தேருக்கு மெருகூட்டும் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03செப் 2013 10:09
கடையநல்லூர்: பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயில் தங்கத் தேர் ஓடுதளத்தில் சுமார் ரூ.7 லட்சம் மதிப்பில் மின் விளக்குகள் உபயதாரர் பணிகளாக நடத்தப்பட்டு வருகிறது. வரும் 11ம் தேதி தங்கத்தேர் வெள்ளோட்டம் நடக்ககூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது முருக பக்தர்களின் நீண்டநாள் விருப்பத்தினையடுத்து தங்கத் தேர் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள முருகன் திருத்தலங்களில் அமைந்துள்ள தங்கத் தேர்களில் பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயில் தங்கத் தேர் அதிக எடையும், அதிக உயரம் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டு வருகிறது. தேரை நிறுத்துவதற்கான பாதுகாப்பு கட்டட பணி முழுமையாக உபயதாரர்கள் மூலம் முடிக்கப்பட்டுள்ள நிலையில் ஓடுதளம் பணியும் உபயதாரர்கள் பணிகளாக நடத்தப்பட்டுள்ளது. தங்கத் தேர் அமைக்கும் பணி முழுவீச்சில் 75 சதவீதம் முடிவடைந்து தற்போது தேரில் அமைக்கப்பட்டுள்ள சிலைகளுக்கு மெருகூட்டும் பணிகள் நடந்து வருகிறது. பிரம்மன், குதிரைகள் போன்றவைகளுக்கு மெருகூட்டும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.இதனிடையில் தங்கத்தேர் ஓடுதளத்தில் பக்தர்களின் விருப்பத்திற்கிணங்க தற்போது சுமார் ரூ.7 லட்சம் மதிப்பில் மின் விளக்குகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதற்கான கம்பங்கள் தற்போது அமைக்கப்பட்டு வருகின்றன. முன்னாள் திருப்பணிக்குழு தலைவர் அருணாசலம், பரமேஸ்வரி அருணாசலம் மற்றும் உபயதாரர்களின் பணிகளாகவும் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையில் தங்கத்தேர் பணி முழுவீச்சில் முடிவடையவுள்ள நிலையில் இதற்கான வெள்ளோட்டம் வரும் 11ம் தேதி நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் மூலமாக தங்கத்தேர் வெள்ளோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் கார்த்திக் மற்றும் முன்னாள் திருப்பணிக்குழு தலைவர் அருணாசலம், உபயதாரர்கள், கோயில் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.