பதிவு செய்த நாள்
03
செப்
2013
10:09
ஆத்தூர்: ஆத்தூர் வெள்ளை விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. ஆத்தூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், வசிஷ்ட நதிக்கரையில், 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த வெள்ளை விநாயகர் கோவில் உள்ளது. வரும், 9ம் தேதி விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, நேற்று முன்தினம், காலை, 6.30 மணிக்கு கணபதி ஹோமம், கொடியேற்று விழா நடந்தது. காலை, 9 மணி முதல், 12 மணி வரை, விசேஷ அபிஷேகம், தீபாரதனை, வெள்ளி கவச அலங்காரமும், மாலை, 3 மணி முதல், இரவு, 9 மணி வரை, வெண்ணெய் காப்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வரும், 9ம் தேதி, விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, வெள்ளை விநாயகருக்கு, வெள்ளி கவசம், அருகம்புல், சந்தன காப்பு, வெண்ணெய் காப்பு என, சர்வ சிறப்பு அலங்காரம் செய்யப்படும். 10ம் தேதி, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், விநாயகர் திருவீதி உலா நடக்கிறது. * அதேபோல், ஆத்தூர் சப்-டிவிசன் பகுதிக்கு உட்பட்ட ஆத்தூரில், 15 விநாயகர் சிலைகளும், தம்மம்பட்டியில், 55 சிலைகள், மல்லியக்கரை ஐந்து சிலை, தலைவாசல், வீரகனூர் மற்றும் கெங்கவல்லியில், 30 என, மொத்தம், 110க்கும் மேற்பட்ட இடங்களில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, ஊர்வலமாக எடுத்துச் சென்று, "விசர்ஜனம் செய்வதற்கு, பா.ஜ., இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தோர், அனுமதி பெற்றுள்ளனர்.