பதிவு செய்த நாள்
10
செப்
2013
10:09
அன்னூர்: அன்னூரில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில், விசர்ஜன ஊர்வலம் நடத்தப்பட்டு, சிறுமுகையில் பவானி ஆற்றில் 32 சிலைகள் கரைக்கப்பட்டன. விஸ்வ இந்து பரிஷத் சார்பில், அன்னூர் வட்டாரத்தில் 32 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. நேற்று மாலை அனைத்து ஊர்களிலிருந்தும் விநாயகர் சிலைகள் அன்னூர், பாத விநாயகர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு நடந்த விழாவில், விஸ்வ இந்து பரிஷத்தின் கோவை கோட்ட பொறுப்பா ளர் தங்கவேல் தலைமை வகித்தார்.பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாலை 6.30 மணிக்கு மருதாசல அடிகள் மற்றும் சித்தர்சாமிகள் கொடியசைத்து விசர்ஜன ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். சத்தி ரோடு, அவிநாசி ரோடு, கோவை ரோடு வழியாக ஊர்வலம் இரவு மீண்டும் பாத விநாயகர் கோவிலை அடைந்தது. அங்கிருந்து, லாரி, வேன்கள் மூலம் 32 சிலைகளும், ஆலாங்கொம்பில், பவானி ஆற்றில் கரைக்கப்பட்டன. பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி., மோகன் தலைமையில் 30 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.