சரவணம்பட்டி: சரவணம்பட்டியில் சிரவணமாபுரீசுவரர் கோவில் சார்பில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, பொதுமக்கள் விநாயகருக்கு 22 அடிதேர் இழுத்தனர். சரவணம்பட்டியில் சிரவணமாபுரீசுவரர் - சிவகாமியம்மன் உடனுறை கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியின்போது தேர்த்திருவிழா நடக்கிறது. திருக்கோவில் வீதியிலிருந்து 5 கி.மீ.,க்கு ஊர்வலமாக வந்தது. இக்கோவிலின் தேர்த்திருவிழா 71வது ஆண்டாக நடக்கிறது. கடந்த ஆண்டு வரை தேரின் உயரம் 13 அடியாக மட்டுமே இருந்தது. இந்த ஆண்டு புதுப்பிக்கப்பட்டு தேரின் உயரம் 22 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், சத்திரோட்டில் உள்ள மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டு பாதை சீரமைக்கப்பட்டது. தேர்நிலைத்திடலில் துவங்கிய வீதி உலா நிகழ்ச்சியில் தேரை, சிரவணபுரியாதீனம் குமரகுருபர சுவாமிகள் துவக்கி வைத்தார். வராஹி மணிகண்ட சுவாமிகள், பேரூராதீனம் மருதாசல அடிகள் வடம்பிடிக்க, வீதி உலா துவங்கியது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிரவணமாபுரீசுவரர் வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.