பதிவு செய்த நாள்
10
செப்
2013
10:09
திருப்பூர்:திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் மாவட்டம் முழுவதும் 1,085 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. டவுன்ஹால் விநாயகர் கோவில், ஷெரீப் காலனி, கே.பி.என்., காலனி, அவிநாசி ரோட்டில் உள்ள கோவில்களில், சிறப்பு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல், சுண்டல், வடை ஆகியவை படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.இந்து முன்னணி சார்பில், நகர பகுதிகளில் 640 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. ஊஞ்சல் விநாயகர் சிலை, வலம்புரி மற்றும் இடம்புரி விநாயகர், கற்பக விநாயகர், சிங்க வாகன விநாயகர், ருத்ராட்ச மாலை விநாயகர், வீர விநாயகர், செல்வ விநாயகர், அன்ன வாகனம், மயில் வாகனம் என ஏழரை அடி முதல் பல வடிவங்களில் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன.
கோட்டை மாரியம்மன் கோவில் முன்புறமும், உஷா ஜங்ஷன் பகுதியில் 13 அடி உயர சிலை வைக்கப்பட்டிருந்தன; இ.எஸ்.ஐ., கிளை சார்பில், 108 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. புது பஸ் ஸ்டாண்ட் மற்றும் ஸ்ரீநகர், வள்ளலார் நகர் பகுதியில் தலா 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ராமமூர்த்தி நகர் கிளையில், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கோலப்போட்டிகள் நடந்தன. 80 பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். வண்ண கோலங்கள், அரிசி, மாவு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களாலும், பனியன் வேஸ்ட் துணியாலும் கோலம் வரைந்து பெண்கள் அசத்தினர்.தொடர்ந்து, கிராமிய கலை நிகழ்ச்சிகள், பள்ளி மாணவர்களுக்கு தேசப்பற்று குறித்த கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. பெண்களுக்கு பூ கட்டும் போட்டி மற்றும் விளையாட்டு போட்டிகள் நடந்தன.இந்து முன்னணி பிரதிஷ்டை செய்துள்ள சிலைகள், நாளை (11ம் தேதி) விசர்ஜனம் செய்யப்படுகின்றன. தெற்கு பகுதி விசர்ஜன ஊர்வலம், கரட்டாங்காடு, பெரிச்சிபாளையம், பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாகவும், மேற்கு பகுதி ஊர்வலம், செல்லம் நகரில் துவங்கி, கே.டி.சி., பள்ளி வீதி, மேற்கு பிள்ளையார் கோவில் வீதி வழியாகவும், வடக்கு பகுதி ஊர்வலம், புதிய பஸ் ஸ்டாண்ட் பிரிட்ஜ்வே காலனி, மில்லர் வழியாகவும் வந்து, ஆலங்காட்டில் இணைகிறது. அங்கு, நிறைவு விழா பொதுக்கூட்டம் நடக்கிறது.
சிவசேனா சார்பில், பி.என்.ரோடு நெசவாளர் காலனி பகுதியில், அரிவாள், அரக்கன் தலையை வெட்டி, கையில் பிடித்தபடி, 20 அடி உயர பயங்கரவாத ஒழிப்பு விநாயகர் சிலை வெவ்வேறு வடிவங்களில், 10 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. பாரத் சேனா சார்பிலும் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. வி.எச்.பி., பஜ்ரங்தள் சார்பில், சாந்தி தியேட்டர் அருகில், ஐந்து தலைநாகர் மீது பவனி வரும் விநாயகர் சிலை உட்பட 26 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகள் சார்பில் விசர்ஜன ஊர்வலம், 12ம் தேதி நடக்கிறது.மொத்தம் 1,085 சிலைகள்மாவட்டம் முழுவதும் இந்து அமைப்புகள் சார்பில், 1,085 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. போலீஸ் கணக்குப்படி, இந்து முன்னணி சார்பில் 878, இந்து மக்கள் கட்சி (அர்ஜூன் சம்பத்) 71; இந்து மக்கள் கட்சி (ஸ்ரீதர்) 27; பா.ஜ., 30; சிவசேனா 10; வி.எச்.பி., 26; பொதுமக்கள் 43 இடங்கள் என மொத்தம் 1085 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 1,200 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.அவிநாசி: இந்து முன்னணி சார்பில், அவிநாசி, சேவூர், திருமுருகன்பூண்டி வட்டாரத்தில் 90 இடங்களில், இரண்டு அடி முதல் 10 அடி வரை உயரமுள்ள விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தன. அம்மாபாளையம், திருமுருகன்பூண்டியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.அவிநாசி கமிட்டியார் காலனியில், உலக நன்மைக்காக சிறப்பு கணபதி ஹோமம் நடந்தது. நாளை மாலை 6.00 மணிக்கு திருவிளக்கு பூஜை, கோமாதா பூஜை, சிறுவர் விளையாட்டு விழா மற்றும் சிறப்பு பஜனை ஆகியன நடக்கின்றன. 12ம் தேதி மாலை 4.00 மணிக்கு விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது. அதன்பின், சிறுமுகை அருகே பவானி ஆற்றில் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படுகின்றன.