பதிவு செய்த நாள்
11
மார்
2011
05:03
சீனிவாசன் காட்டுக்குள் சென்று சிங்கம், புலி முதலானவற்றைக் கொன்று குவித்தார். யானைகளை விரட்டியடித்தார். முள்ளம்பன்றிகள் அவரது முழக்கம் கேட்டு மூலைக்கொன்றாக சிதறி ஓடின. அப்போது ஒரு யானை அவரை போக்கு காட்டி காட்டுக்குள் இழுத்துச் சென்றது. எவ்வளவு வேகமாகச் சென்றாலும், அந்த யானையைப் பிடிக்கவோ, அம்பு விடவோ சீனிவாசனால் முடியவில்லை. அது வெள்ளை நிறத்தில் இருந்தது. அதைப் பிடித்தே தீருவதென கங்கணம் கட்டிய சீனிவாசன், பிரம்மாவை நினைத்தார். பிரம்மா பணிவுடன் அவர் முன் வந்து நின்றார். அவரது தேவையை அறிந்து பறக்கும் வெள்ளைக்குதிரை ஒன்றைக் கொடுத்தார். அதன் மீதேறிச் சென்ற சீனிவாசன் யானையை கணநேரத்தில் மடக்கி விட்டார். அந்த யானை இந்திரனுக் குரியது. அதன் பெயர் ஐராவதம். சீனிவாசனின் தரிசனம் தனக்கு வேண்டும், அதுவும் நீண்ட நேரம் வேண்டும் என நினைத்த அந்த யானை அவரை இவ்வாறு போக்கு காட்டி இழுத்தடித்தது. அது தன் முன்னால் வந்து நின்ற சீனிவாசனை மண்டியிட்டு வணங்கியது. அதற்கு அருள் செய்தார் சீனிவாசன். பின்னர் அந்த யானை மறைந்து விட்டது. அது மட்டுமல்ல! அந்த யானை காரணத்துடன் தான் அங்கே அவரை இழுத்து வந்தது. தான் ஏறி வந்த குதிரைக்கு அருகில் இருந்த ஒரு குளத்தில் தண்ணீர் காட்டிய சீனிவாசன், தானும் தாகம் தணித்து மர நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, எங்கிருந்தோ இனிய கானம் ஒன்று கேட்டது. அது ஒரு பெண்ணின் குரல். ஆஹா...குரலே இப்படியென்றால், அந்தப் பெண் அதிரூப லாவண்யத்துடன் இருப்பாளோ! அவளைப் பார்த்தாக வேண்டுமே, என தனக்குள் சொல்லியபடியே குரல் வந்த திசை நோக்கி கவனித்தார் சீனிவாசன். அவள் பாடும் போது, இன்னும் பல பெண்கள் சிரிப்பை சிதறவிட்டபடியே அவளுடன் பேசுவது தெரிந்தது. நேரமாக ஆக, அவர்களின் குரல் அவர் தங்கியிருந்த அரசமரத்தை நெருங்கியது.
ஆனால், பல பேரழகுப் பெண்கள் புடைசூழ நடுவிலே தேவலோகத்து ரம்பை ஊர்வசி, திலோத்துமை இவர்களின் ஒட்டுமொத்த அழகையும் ஒன்றாகக் கோர்த்தது போன்ற பிரகாச முகத்துடன் ஒரு பெண் பாடிய படியே வந்து கொண்டிருந்தாள். சீனிவாசன் அசந்து விட்டார். அழகென்ற சொல்லே இல்லாதவர்களிடையே கூட கண்டதும் காதல் உருவாகி விடுகிறது. இவளோ பேரழகு பெட்டகம். சீனிவாசன் அவள் மீது காதல் கொண்டு விட்டார். அவர் தைரியமாக அவர்கள் முன் சென்றார். அவரைப் பத்மாவதியும் தோழிகளும் கவனித்து விட்டனர். யாருமே நுழைய முடியாத, என் தந்தை ஆகாசராஜனால் தடை விதிக்கப்பட்ட காட்டுப்பகுதிக்குள் வந்துள்ள இவர் யார் என்று விசாரித்து வாருங்கள், என தோழிகளுக்கு உத்தரவிட்டாள். அந்த சொப்பன சுந்தரிகள் அனைவரும் சீனிவாசனை நோக்கி வந்தனர். ஏ நீ யார்? இங்கே எதற்காக வந்தாய்? இது எங்களைத் தவிர பிறர் நுழைய தடை செய்யப் பட்ட இடமாக எங்கள் மகாராஜாவால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. உம்மைப் பற்றி விசாரிக்கச் சொல்லி அதோ! அங்கே நிற்கும் எங்கள் இளவரசியாரின் உத்தரவு! உம்...பதில் சொல்லும், என மிரட்டும் தொனியில் கேட்டனர். லோகநாயகனை மனிதர்கள் புரிந்து கொள்வதே இல்லை! கடவுளா, அப்படியென்றால் யார்? என்று தான் இன்றுவரை கேட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆண்டவன் அதுபற்றி கவலைப் படுவதில்லை. தன்னைப் பற்றிய ஆராய்ச்சி தொடர்கிறதே! அப்போதாவது, மனிதன் நம்மை நினைக்கிறானே என்று சொல்லிக் கொள்கிறான். கடவுள் என்றாலும் மானிட வடிவில் வந்துள்ளவனை அந்தச் சாதாரணப் பெண்கள் புரிந்துகொள்ளாமல் கேட்டார்கள். சீனிவாசன் பதில் சொன்னார். நான் யார் என்று எனக்குத் தெரியாது. நான் ஒரு தனி ஆள். எனக்கு தாயும் இல்லை, தந்தையும் இல்லை. இருப்பிடம் மட்டும் தெரியும்! நான் சேஷாசலத்தில் குடியிருக்கிறேன், என்று பதிலளித்தார் சீனிவாசன்.பத்மாவதியின் காதில் இந்தப் பதில் விழுந்தது.
அவள் மகாலட்சுமியின் அவதாரமல்லவா! அவர் மீது அவள் இரக்கம் கொண்டாள். அவள் சீனிவாசனின் அருகில் வந்தாள். சீனிவாசன் மிகுந்த ஆவலுடன் அவளைப் பார்த்தாள். பத்மாவதி அதைப் பொருட்படுத்தாமல், மகாபுருஷரே! உமக்கு பெற்றவர்கள் இல்லை என்கிறீர்! இங்கே யாரும் வரக்கூடாது என்ற உத்தரவு இருக்கிறது. நீர் இங்கிருப்பது என் தந்தை ஆகாசராஜனுக்கும், தாய் தரணீதேவிக்கும் தெரிந்தால் உம்மைத் தண்டித்து விடுவார்கள். இங்கிருந்து போய்விடும், என எச்சரித்தாள். சீனிவாசன் அதைக் காது கொடுத்தே கேட்கவில்லை. அந்த அழகு சிற்பத்தை அங்குலம் அங்குலமாக ரசித்த அவர்,பெண்ணே! அதெல்லாம் இருக்கட்டும்! நான் சொல்வதைக் கேள்! உன் கானம் என்னை ஈர்த்தது. அப்போதே நான் உன்னை அதிரூப சுந்தரி என நினைத்தேன். அதுவே நிஜமும் ஆயிற்று. உன் குரல் கேட்டவுடன் உன் மீது அன்பு பிறந்தது. உன் உருவம் கண்டதும் அது காதலாகி விட்டது. உன்னை விட்டுச் செல்ல எனக்கு மனமே வரவில்லை. உன்னை இனிபிரியவும் மாட்டேன். உன்னை மனதார காதலிக்கிறேன். இனி வாழ்ந்தால் பத்மாவதியான உன்னோடு தான், என்றபடியே குறும்பு சிரிப்பு சிரித்தார் அந்த மாயவன். பத்மாவதிக்கு கடுமையான கோபம். பின்னே இருக்காதா... முன்பின் தெரியாதவன். எளிய தோற்றத்தில் இருக்கிறான். வேடனைப் போல் வில் அம்புடன் வந்துள்ளான். ஒரு வேடன் தன்னைக் காதலிப்பதாவது! அவளது கண்களில் அனல் கொப்பளித்தது. அது வார்த்தைகளாக வெடித்தது.ஏ முரடனே! நான் இந்நாட்டின் இளவரசி எனத் தெரிந்தும் இப்படி பேசினாயா? உடனே ஓடி விடு. என் தந்தைக்கு இது தெரிந்தால் உன் உயிரைப் பறித்து விடுவார். பறவைகளையும், மிருகங்களையும் வேட்டையாடும் உனக்கு அவற்றின் புத்தி அப்படியே ஒட்டிக்கொண்டது போலும்! வேடனும் ராஜகுமாரியும் எங்காவது ஒன்று சேரமுடியுமா! புத்தி கெட்டவனே ஓடிவிடு, என கூச்சலிட்டாள்.