பதிவு செய்த நாள்
11
மார்
2011
05:03
சீனிவாசன் அவளது பேச்சைக் கண்டுகொள்ளவே இல்லை. சற்றும் தயங்காமல் அவளை நெருங்கி காதல் மொழி பேசினார். சுந்தரியே! இனி என் சொப்பனத்தில் உன்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணும் இடம்பெற துணியமாட்டாள். மனதின் நினைவுகளே சொப்பனமாக வெளிப்படும். என் மனதின் ஆழத்திற்குள் சென்று விட்ட நீயே என் கண்களில் நிழலாடுவாய். உன்னிலும் உயர்ந்த அழகி இனி உலகில் பிறக்க முடியாது. நீயே எனக்கு மணவாட்டி. நான் அதை உறுதி செய்துவிட்டேன், என்றார். அவள் விலக விலக அவர் நெருங்கி நின்றே பதில் சொன்னார். அவரை விலக்குவதற்கு தோழிகள் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அவரிடமிருந்து தப்பிக்க நினைத்த பத்மாவதி தன் தோழிகளிடம் ஜாடை காட்ட, அதைப் புரிந்து கொண்ட அவர்கள் கற்களை எடுத்து சீனிவாசன் மீதும் அவர் வந்த குதிரையின் மீதும் வீசினர். அந்தக் குதிரை வலி தாங்காமல் தன் ஜீவனை விட்டது. சீனிவாசனின் நெற்றியிலிருந்தும், உடலில் இருந்தும் ரத்தம் கொட்டியது. அதனால் ஏற்பட்ட வலி அதிகமாக இருந்தாலும், காதலின் முன்னால் அதன் துன்பம் தெரியவில்லை. அதற்கு மேலும் அங்கு நிற்காமல் அவர் அங்கிருந்து வீட்டுக்குச் சென்று விட்டார். காயமடைந்து வீடு திரும்பிய மகனைக் கண்டு வகுளாதேவி கலங்கினாள். சீனிவாசா! இதென்ன கோலம்! ஏன் நடந்தே வருகிறாய்! குதிரையை எங்கே? வேட்டைக்கு போன இடத்தில் விலங்குகள் அதனைக் கொன்று விட்டனவா! உனக்கும் விலங்குகளால் தீங்கு ஏற்பட்டதா? விலங்குகள் உன்னைத் தாக்கியிருந்தால் உடலில் சிராய்ப்புக் காயங்கள் இருக்க வேண்டுமே! இவை ஆழமாக ஏதோ குத்தியதால் ஏற்பட்ட காயங்களாக உள்ளதே! என்னாயிற்று, என்றாள்.
சீனிவாசன் நடந்ததைச் சொன்னார். அம்மா! மன்னர் ஆகாசராஜரின் மகள் பத்மாவதியைக் காட்டில் சந்தித்தேன். அவளை பார்த்தவுடனேயே பூர்வஜென்ம நினைவு எனக்குள் வந்தது. ராமாவதாரம் எடுத்த போது, நான் சீதையுடன் காட்டுக்குச் சென்றேன். ராவண வதத்துக்காக, சீதையைப் போலவே மற்றொரு மாயசீதையைஉருவாக்கினார் அக்கினி பகவான். நிஜ சீதையை தன் மனைவி ஸ்வாகாதேவியின் பொறுப்பில் ஒப்படைத்து விட்டு, மாய சீதையான வேதவதியை ராவணன் கடத்திப் போகுமாறு செய்தார். ராவண வதம் முடிந்ததும் அவர் அவளை என்னிடம் அழைத்து வந்து, அவளைத் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார். நான் அந்த அவதாரத்தில் ஏகபத்தினி விரதம் ஏற்றிருந்ததால் அவளை சீனிவாசனாக அவதாரம் செய்யும் காலத்தில் மணப்பதாக உறுதி கொடுத்தேன். அந்த மாய சீதையே இப்போது பத்மாவதியாக வந்திருக்கிறாள். அவளை மணப்பதாக அளித்த உறுதிமொழியை நிறைவேற்றியாக வேண்டும், என்றார். வகுளாதேவி அவரிடம், மகனே! அவ்வாறே இருந்தாலும் கூட, மன்னன் மகளாகப் பிறந்து விட்ட அவளை நீ எப்படி சொந்தமாக்கிக் கொள்ள முடியும். ஏணியில் ஏறி வானத்தின் உச்சியைத் தொட நினைப்பது போல் அறியாமையில் மூழ்கிக் கிடக்கிறாயே! ஏழையான உன்னை ஆகாசராஜன் மனைவியாக ஏற்கவும் மாட்டான், பத்மாவதி ஒதுக்கத்தான் செய்வாள், என்று சொல்லி, அந்தக் காதலை மறந்து விடும்படி புத்திமதியும் சொன்னாள். இதனிடையே அரண்மனை திரும்பிய பத்மாவதியின் மனம் ஏனோ நிலையில்லாமல் தவித்தது. பாவம், அந்த இளைஞன்! அவன் அப்படியென்ன தவறு செய்துவிட்டான்! தன் காதலை என்னிடம் வெளிப்படுத்தினான், வேடனாயினும் அவன் அழகன். என் மனம் அவனிடம் சென்றுவிட்டது போல் தோன்றுகிறது. விலங்குகளை வேட்டையாட வந்தானா! அல்லது என் உள்ளத்தை வேட்டையாடிச் சென்றானா! அவனைச் சுற்றியே மனம் ஓடுகிறதே! அவனது குதிரையைக் கொன்று, அவனையும் கல்லால் அடித்தேன்! ரத்தம் சொட்டச் சொட்ட அவன் இல்லத்துக்குச் சென்றான். ஐயோ! வலிதாங்காமல் அழுவானோ! அவனது குடும்பத்தினர் என்னை நிந்திப்பார்களே! ஏன் என் மனம் அவனைச் சுற்றுகிறது! நிச்சயமாக, நான் அவனது காதல் வலையில் சிக்கிவிட்டேன் என்றே கருதுகிறேன், என்றவள் மனதுக்குள் அவனை நினைத்தபடியே குமைந்தாள்.
அவளுக்கு தூக்கம் போனது. உணவுண்ண மனமில்லை. கண்கள் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. அப்பாவிடமும், அம்மாவிடமும் காதலைச் சொல்ல பயம்! போயும் போயும் ஒரு வேடனைக் காதலிக்கிறேன் என்றா சொல்கிறாய், என்று பெற்றவர்கள் திட்டுவார்களே! இளைஞனே! நீ என் மனதைக் கொள்ளையடித்துப் போய் விட்டாயே! நீ எங்கிருக்கிறாயோ! உன் நினைவு என்னை வாட்டுகிறதே, என ஏக்கத்துடன் புலம்பினாள். அவளது உடல் மெலிந்தது. உணவு, உறக்கமின்றி தவித்த மகளைக் கண்டு பெற்றோர் கலங்கினர். அரண்மனை வைத்தி யர்கள் பத்மாவதியை சோதித்தனர். பல மருந்துகளும் கொடுத்தாயிற்று. ஆனால், பத்மாவதி எழவில்லை. காட்டில் காத்து கருப்பைக் கண்டு பயந்திருப்பாளோ! உடனடியாக மந்திரவாதிகள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் செய்த முயற்சிகளும் வீணாயின. தாய் தரணீதேவி மகளின் நிலை கண்டு கண்ணீர் வடித்தாள். எல்லா கோயில்களிலும் மகள் குணமாக வேண்டி சிறப்பு பூஜை செய்தாள். ஊஹூம்...பத்மாவதி எழவே இல்லை.உலகிலேயே தீர்க்க முடியாத வியாதி ஒன்று இருக்கிறதென்றால் அது காதல் வியாதி தான். பொல்லாத அந்த வியாதியின் பிடியில் சிக்கிய யார் தான் மீள முடியும்?இதே நிலை தான் வராக வனத்தில் தங்கியிருந்த சீனிவாசனுக்கும் ஏற்பட்டது.அவரும் படுக்கையில் புரண்டார்.தவறு செய்து விட்டோமே! வேடனின் வேடத்தில் சென்றால் எந்தப் பெண் தான் விரும்புவாள்! நாம் நம் சுயரூபத்தில் சென்றிருந்தால், அவள் நம்மை விரும்பியிருக்கக் கூடும். உம்... தப்பு செய்து விட்டோமே, என புலம்பினார். மகனின் நிலை கண்ட தாய், சீனிவாசா! கவலைப்படாதே, நான் ஆகாசராஜனிடம் செல்கிறேன். பத்மாவதியை பெண் கேட்கிறேன். இருவருக்கும் நிச்சயம் திருமணமாகும். அமைதியாக இரு, என்று சொல்லி அரண்மனை நோக்கி புறப்பட்டாள்.