ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் எழுவதற்கு காரணமான வில்லாளன் என்ற வேடனின் தம்பி கண்டன். வில்லாளன், ஒரு முனிவர் மூலம் நாராயண மந்திரத்தை அறிந்து, அதையே சொல்லி தவமிருந்த வேளையில், பெருமாள் அவனைச் சோதிக்க வேங்கைப்புலி வடிவில் வந்தார். வில்லாளன் மீது பாய்ந்து காயப்படுத்தினார். தடுக்க முயன்ற கண்டன் மீது பாய்ந்து தின்று விட்டார். இதற்கெல்லாம் கலங்காமல் தவம் செய்த வில்லாளனைப் பாராட்டி, கண்டனை மீண்டும் உமிழ்ந்தார். அப்போது, வில்லாளன், அவனை ஏன் உமிழ்ந்தீர்கள்? உங்களுடன் அவன் ஐக்கியமாக என்ன பாக்கியம் செய்திருக்க வேண்டும்? என்னையும் நீங்கள் விழுங்கியிருந்தால் இன்னும் நன்றாய் இருந்திருக்குமே! என்றான். வில்லாள தாயான வில்லியும் இதே கருத்தை திருமாலிடம் சொன்னாள். அவர்களின் பக்தி கண்டு திருமால் நெகிழ்ந்தார். அவர்கள் எழுப்பிய கோயிலே ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயிகோயில்.