பதிவு செய்த நாள்
11
செப்
2013
11:09
சென்னை: திருமலையில், வரும் அக்டோபர் மாதம் துவங்கவுள்ள, வருடாந்திர பிரம்மோற்சவத்திற்காக, 3 கோடி ரூபாய் செலவில், அலங்கார மின்விளக்குகள் அமைக்க, தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. மாடவீதிகள் முழுவதும், தடுப்பு கம்பிகள் அமைத்தல், வெள்ளையடித்து ரங்கோலி வரைதல், திருக்குளத்தை சுத்தம் செய்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. கிருத, திரேதா, துவாபர மற்றும் கலியுகம் ஆகியவற்றின், வரலாற்றை பறைசாற்றும் வகையில், மலர் கண்காட்சிகளும், எல்.இ.டி., விளக்கு வடிவமைப்புகளும் அமைக்க, சென்னை, பெங்களூரு மற்றும் ஆந்திராவிலிருந்து வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவும், முடிக்காணிக்கை செலுத்துமிடத்தில், கூடுதலாக, 1,500 பேரைப் பணியமர்த்தவும், லட்டு பிரசாதங்களை தேவையான அளவு தயாரிக்கவும், தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
திருமலை தேவஸ்தானம் புதிய டிவி சானல்: திருமலை - திருப்பதி தேவஸ்தானம், விரைவில், புதிய, "டிவி சானலை துவங்க முடிவு செய்து உள்ளது. திருமலை தேவஸ்தானத்திற்கு சொந்தமான, எஸ்.வி.பி.சி., சானலில் பணியாற்றும் ஊழியர்களின், பணி விதிமுறைகளில், சில சிக்கல்கள் உள்ளதாகவும், அவற்றைத் தீர்த்த பின், இரண்டாவது, "டிவி சானல் துவங்கும் பணி துரிதப்படுத்தப்படும் என்றும், தேவஸ்தான உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். - நமது நிருபர் -