பதிவு செய்த நாள்
11
செப்
2013
11:09
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ஏர்வாடியில், ஒரு மாதத்திற்குள் அரசு சார்பில், பிரார்த்தனையுடன் கூடிய மனநல சிகிச்சை மையம் துவங்குவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏர்வாடி தர்காவிற்கு, தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமானோர் வந்து தங்கி, மனநல நோய்க்கு பிரார்த்தனை செய்கின்றனர். அங்கு, பிரார்த்தனையுடன், உரிய சிகிச்சை பெற, அரசு முயற்சி எடுத்துள்ளது. இதற்காக மருத்துவ பணி இயக்குனர் டாக்டர் சந்திரநாதன் தலைமையில் மனநல திட்ட, மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராமசுப்பிரமணி, பெரியார் லெனின் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் மற்றும் ஏர்வாடி தர்கா நிர்வாகக்குழு தலைவர், செயலாளர் உட்பட 10 பேர், குஜராத், உணவாவில் உள்ள சையது அலி மிரா தத்தார் தர்காவில் செயல்படும் "தவா துவா(சிகிச்சை, பிரார்த்தனை) திட்டத்தை பார்வையிட்டு வந்துள்ளனர். ராமநாதபுரம், டாக்டர் பெரியார் லெனின் கூறியதாவது: இத்திட்டத்தின்படி, முதலில் தர்காவில் பிரார்த்தனைக்கு பின் சிகிச்சை. மீண்டும் பிரார்த்தனை செய்வதாகும். குஜராத்தில் சிறப்பாக செயல்படுகிறது. அங்கு தினமும் 100க்கும் மேற்பட்டோர், பயனடைந்து வருகின்றனர். அதேபோல, ஏர்வாடி தர்காவில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கை, அரசுக்கு அனுப்பபடும். ஒரு மாதத்திற்குள், ஏர்வாடியில், அரசின், சிகிச்சை மையம் துவங்கப்பட உள்ளது, என்றார்.