பதிவு செய்த நாள்
24
செப்
2013
03:09
தணிகைஅந் தாதிபிள்ளைத் தமிழ்உலா
கலம்ப கம் சொல்
அணிதமிழ் அதிற்கல் லாரமான் மியம்
எல்லாம் பாடிப்
பிணிதவிர் பூதிபாடிப் பிறப்பிறப்
பெல்லா வாழ்வும்
கணிகைவெற் பதிலே வேண்டும்
கந்தப்பர் அடிகள் வாழி!
குருநாதா! அடியேன் தீராத வயிற்றுவலியால் வருந்தி உழல்கிறேன். பல்வேறு மருந்துகள் உண்டும் பயனில்லை. கொடிய விஷம் போன்ற இந்த கர்ம வினை தீர்வதற்கு வழியொன்றும் இல்லையா? தாங்கள் அடியேன் மீது கருணைகாட்டி உதவவேண்டும் என்று தன் குருவின் காலில் வீழ்ந்து வணங்கினார் கந்தப்பர்.
கவிராக்ஷசர் என்று தமிழ்கூறும் நல்உலகம் போற்றும் கச்சியப்ப முனிவர்தான் கந்தப்பரின் குரு. திருத்தணிகைப் புராணம் என்னும் ஒப்பற்ற நூலைப் பாடியவர். தம்முடைய சீடர் கந்தப்பருக்கு ஏற்பட்ட குன்மநோய் தீர்ந்திடவேண்டி தணிகை வேலனின் பாதம் பணிந்து திருத்தணிகை ஆற்றுப்படை எனும் பனுவலை திருவாய் மலர்ந்து அருளினார். என்னே அதிசயம்! தமிழ் அறியும் பெருமான் அருளால் கந்தப்பரின் வயிற்றுவலி இருந்த இடம் தெரியாமல் மறைந்தது.
கந்தப்பரின் முதல் மனைவியின் பெயர் தெய்வானை. அவர்களது இல்லற வாழ்வில் குலம் தழைக்க ஒரு குழந்தை பிறக்காததால், அவருக்கு வள்ளி என்னும் பெயருடைய நங்கையைத் திருமணம் செய்து வைத்தனர் பெற்றோர். கந்தப்பர் தம்முடைய மனைவியருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தும் பிள்ளைப் பேறு வாய்க்கவில்லை. தம் குருநாதர் கச்சியப்ப முனிவரிடம் தம் மனைவியர் இருவரையும் அழைத்துச் சென்று வணங்கி, ஆசி வேண்டினாõர். முருகன் திருவருளால் உங்களுக்குக் குழந்தை பிறக்கும் என்று அவர்கள் இருவருக்கும் திருநீறு அளித்து ஆசி கூறினார் குருநாதர்.
இதனிடையே, கந்தப்பரின் இரு மனைவியரும் தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால் பெருமாளின் திருப்பெயரை வைப்பதாகப் பிரார்த்தனை செய்துகொண்டனர். கச்சியப்ப முனிவரின் ஆசிப்படி இருவரும் ஒரே நேரத்தில் கருவுற்று பிறந்த இந்தக் குழந்தைகளுக்கு ஆறுமுகப்பரமனின் பெயரைச் சூட்ட வேண்டும் என்றார் கந்தப்பர். அப்போது அவரது மனைவியர், நாங்கள் பெருமாளின் பெயரை வைப்பதாக முன்னரே பிரார்த்தனை செய்திருக்கிறோம்! என்றனர். அறிவிற் சிறந்த கந்தப்பர், நல்லது அப்படியே ஆகட்டும்! என்று கூறி, பெருமாள் பெயரே வருமாறு விசாகப் பெருமாள்; சரவணப் பெருமாள் என்று இரு குழந்தைகளுக்கும் பெயர் சூட்டினார்.
இவ்வாறு தணிகை முருகன் திருவருளால் விசாகப் பெருமாள், சரவணப் பெருமாள் என இரண்டு புதல்வர்களைப் பெற்ற கந்தப்பரின் வரலாற்றை அறிந்து கொள்வோமா?
திருத்தணிகையில் முருகப்பெருமானது அடியார்களை உபசரித்துப் போற்றும் ஒரு செல்வந்தர் வீட்டில் பிறந்தவர் கந்தப்பர். தேசிகர் மரபில் வந்த வீரசைவர். தந்தையாரிடம் ஆரம்பக் கல்வி கற்றதோடு, ராமானுசக் கவிராயர் எனும் சிறந்த வித்வானிடம் தமிழ் பயின்றார். 16 வயதுக்குள் அருந்தமிழ் நூல்களைப் பழுதறக் கற்றுணர்ந்தார். திருவாடுதுறை ஆதின வித்வானாகிய சிவஞான முனிவருடைய மாணவரான கச்சியப்ப முனிவரிடம் சைவ சமய இலக்கியங்களைப் பயினறார். பழமலை அந்தாதி, செந்தில் நிரோட்டக யமக அந்தாதி முதலான நூல்களுக்கு உரை எழுதினார். மேலும் பஞ்ச லட்சண வசனம், பஞ்ச லட்சண வினாவிடை என்பவற்றை எழுதி, சில பழைய நூல்களையும் பதிப்பித்துள்ளார். வீரசைவ மரபில் வந்த இவரை கந்தப்ப தேசிகர், கந்தப்பையர் என்றும் அழைப்பர்.
தம்முடைய குரு கச்சியப்ப முனிவர் இயற்றிய திருத்தணிகைப் புராணத்தைப் போல, கல்லார மகாத்மியம் என்னும் வடமொழி நூலைத் தமிழில் தணிகாசல புராண மாகப் பாடினார் கந்தப்ப தேசிகர். திருத்தணிகைப் புராணம் கச்சியப்ப முனிவரது பன்னூல் அறிவையும் கம்பீரத்தையும் வெளிப்படுத்தும். கந்தப்பரின் தணிகாசல புராணமோ இவரது பக்தியையும் அழகிய தமிழ்நடையையும் புலப்படுத்தும். இரண்டு புராணங்களின் வரலாறுகளிலும் செய்திகளிலும் பலவகையில் வேறுபாடுகள் உண்டு. தணிகை முருகன் உவந்து ஏறும் மயிலின் அருமைபெருமைகளை தணிகாசல புராணத்தில் எப்படிப் பாடியுள்ளார் பாருங்கள்...! மயிலை என்ற சொல் 18 முறை இந்தப்பாடலில் வந்துள்ளதைப் படித்துச் சுவைத்துதான் பாருங்களேன்...
அருமையிலை ஒரு பொருளுக் கடிமையிலை பிறருக் (கு)
அந்தகனுக் (கு) ஆண்மயிலை அடியேன்பால் வருதற் (கு)
எருமையிலை சிறுமையிலை இன்மையிலை பகைஞர்க் (கு)
எளிமையிலை மடமையிலை இழி தகைமையிலை நோய்
பொருமையிலை வறுமையிலை பொய்மையிலை பிறவிப்
புன்மையிலை தீமையிலை பொறாமையிலை மகவான்
தருமயிலை வனமயிலை மணந்த திருத்தணிகைச்
சண்முகனார் உவந்தோறும் தனிமயிலைத் தொழவே!
(மகவான் தருமயில்- தெய்வானை; வனமயில்-வள்ளி)
17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் திருப்போரூர்ச் சந்நிதி முறை என்னும் பலவகைப் பனூவலைப் பாடியருளியுள்ளார். அதைப் போல, 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கந்தப்ப தேசிகர் திருதத்தணிகைச் சந்நிதி முறை என்னும் 646 பாடல்களைக் கொண்ட பல்வகைப் பிரபந்தத்தை முருகனுக்குச் சூட்டியுள்ளார். பிள்ளைத்தமிழ்,மாலை, சதகம், அந்தாதி,, கலம்பகம், மயில் பத்து, வேல் பத்து, சேவல் பத்து, சிர்ப்பாதப் பத்து, தணிகைமலைப் பத்து மற்றும் தணிகை உலா ஆகிய பிரபந்தங்களை உள்ளடக்கியது இத்தொகுப்பு. இதனைத் தணிகையாண்டவன் சந்நிதியில் பாவலர், நாவலர் போற்ற, அரங்கேற்றி மகிழ்ந்தார் கந்தப்ப தேசிகர். இவரது வாக்கு மிக நயமமானது. இவர் தணிகை முருகன் அருளை முழுவதும் பெற்ற வரகவி. இவரது பாடல்களில் சந்த நøயும் கொஞ்சு தமிழும் விஞ்சி நிற்கும். இவரது வாக்கின் அருமையை தணிகை உலாவில் பலமுறை படித்துச் சுவைக்கலாம்.
கந்தப்ப தேசிகருக்கு ஏற்பட்ட குன்ம நோயை, அவரது குருநாதர் தணிகை முருகனிடம் வேண்டிப் பாடித் தீர்த்தது போல, இருவரும் தம் சீடர் ஒருவருக்கு ஏற்பட்ட தீராத நோயைப் போக்க தணிகாசல அனுபூதி என்னும் பாமாலையை தணிகை முருகனுக்குச் சூட்டினார். அந்தப் பாடலின் சுவையில் மகிழ்ந்த தணிகைமேவும் பவரோக வைத்தியநாதப் பெருமான், அவரது சீடரின் நோயைக் குணமாக்கினார் என்பது வரலாறு.
சிந்தாமணியே ! திருமால் மருகா
வந்தார்க்கு உயர் வாழ்வு கொடுத்தருள்வாய்
நொந்து ஆழ் வினையேன் முகம் நோக்கி வரம்
தந்து ஆள் முருகா ! தணிகாசலனே!
மிக அற்புதமான இந்தப் பாமாலையில் மூன்று பாடல்களே இன்று நமக்குக் கிடைத்துள்ளன என்பது நமது தவக்குறைவே! இவர் தமது புதல்வர்கள் இருவருக்கும் சிறந்த புலமை பெறும் அவளில் முத்தமிழ் அறிவை முறையாகக் கற்றுக்கொடுத்து, அவர்களை புகழ் பெறச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருத்தணிகைக் குமரனது திருநோகக்கில் கச்சியப்பக்
குரு முனிவர் அருட் திறத்தால் குடல் நோய் தீர் தரப்பெற்று
அருள் பெருகு தமிழ் நூல்கள் அளித்துதவ இருபுதல்வர்
தரு கநகதப் பத்தவனார் கருதுகுகன் பதம் போற்றி!