பதிவு செய்த நாள்
25
செப்
2013
11:09
திருப்பதி: திருமலையின் வரலாற்றில் முதன்முறையாக, திருமலைக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும், தெலுங்கானா எதிர்ப்பு போராட்ட குழுவினரால், நேற்று நிறுத்தப்பட்டன. இதனால், திருமலைக்கு செல்ல முடியாமலும், திருமலையில் இருந்து, கீழே இறங்க முடியாமலும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திண்டாடி போயினர்.
தெலுங்கானா போராட்டம்: ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைவதை எதிர்த்து, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, ஆந்திராவில் போராட்டம் நடந்து வருகிறது. அரசு ஊழியர்களும், போக்குவரத்துக் கழக ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை. போக்குவரத்துக் கழக ஊழியர்களின் போராட்டத்தால், பஸ்கள் இயக்கப்படவில்லை. தனியார் வாகனங்கள் மட்டும் இயங்கி வந்தன. திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து, அலிபிரி வரை, தேவஸ்தான இலவச பஸ்கள் இயக்கப்பட்டன. அலிபிரியில் இருந்து திருமலைக்கு, அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. போராட்டத்தின் உச்சகட்டமாக, நேற்று, திருமலைக்கும், எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. இதனால், பக்தர்கள் ஆங்காங்கே தங்கினர். நேற்று காலை, 5:00 மணி முதல், திருப்பதியில் போராட்டம் துவங்கியதால், ரயிலில் வந்த பக்தர்கள், ரயில் நிலையத்தில் தங்கினர். திருப்பதியில் இருந்து செல்ல வேண்டிய பக்தர்களும், சொந்த ஊருக்கு செல்ல முடியாமல், திருப்பதியிலேயே தங்கினர். திருப்பதி அல்லது திருமலையில், தங்கும் விடுதியில் வாடகை அறைகளை முன்பதிவு செய்த பக்தர்கள், அந்த அறைகளில், 48 மணி நேரம் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவர். அதற்கு பின், இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்; இது தான் நடைமுறை.
கட்டணம் இல்லை: எனினும், தற்போதைய போராட்டம் காரணமாக, வாடகைக்கு அறைகளை எடுத்தவர்கள், கூடுதல் கட்டணம் இன்றி, அதிலேயே தங்கிக் கொள்ளலாம் என்று தேவஸ்தானம் கூறியது. அவ்வாறு தங்கிய பக்தர்களுக்குத் தேவையான, சிற்றுண்டி, உணவு, தண்ணீர், குளிர்பானங்கள், பால் போன்றவற்றை, தேவஸ்தானம் இலவசமாக வழங்கியது. திருமலையில் இருந்து திருப்பதிக்கு, மலைப்பாதையில் இறங்குபவர்கள், இரவு, 12:00 மணி வரை அனுமதிக்கப்படுவர். நேற்று போராட்டம் நடைபெற்றதன் காரணமாக, முதல் நாள் இரவு முழுவதும், திருமலையில் இருந்து கீழிறங்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அதிகாலை, 5:00 மணிக்கே போராட்டம் துவங்கி விட்டதால், மலைப்பாதையில், 15 கி.மீ., தொலைவிற்கு, பக்தர்களின் வாகனங்கள் நின்றன.
உணவு குடிநீர்: மலைப்பாதையில், கடைகள் இல்லாததால், உணவு மற்றும் தண்ணீருக்காக, பக்தர்கள் நடந்து வந்தனர். அவர்கள் கீழே வந்ததும், தேவஸ்தானம் ஏற்பாடு செய்திருந்த, உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது. திருப்பதி நகரில், பொதுமக்கள் சொந்த இருசக்கர வாகனங்களில் செல்ல, போராட்டக் குழுவினர் அனுமதித்தனர்; ஆனால், திருமலைக்கு செல்ல அனுமதிக்கவில்லை. திருப்பதி முழுவதும், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், தனியார் அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன. அலிபிரி அருகில், தமிழக பக்தர்கள், 50 பேர், ஆந்திர மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக, குரல் கொடுத்தனர். திருமலையில், நேற்று முன்தினம் இரவு, 22 அறைகளில் பக்தர்கள் காத்திருந்தனர். நேற்று காலை, 11 அறைகளில், 33 ஆயிரம் பேர் காத்திருந்தனர். நேற்று அதிகாலை முதல், மதியம், 2:30 மணி வரை, பாதயாத்திரையாக, 14 ஆயிரம் பக்தர்கள் காத்திருந்தனர். மாலை, 6:00 மணிக்குப் பின், திருமலையில் இருந்து அலிபிரிக்கும், அலிபிரியில் இருந்து திருமலைக்கும், வாகனங்கள் அனுமதிக்கப்படும். திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து, தேவஸ்தான இலவச பேருந்து இயக்கப்படும் என்று போராட்டக்காரர்கள் கூறியதால், பக்தர்கள் நிம்மதி அடைந்தனர்