ஆழ்வார்குறிச்சி : சிவசைலம் சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் கோயிலில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள சிவசைலத்தில் மேற்கு நோக்கி அமைந்துள்ள பரமகல்யாணி அம்பாள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் கோவிலின் உள்ளே புகுந்து பட்டப்பகலில் நுழைவு வாயில் அருகே உள்ள உண்டியலில் இருந்த பணம் முழுவதையும் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இந்த உண்டியலின் பின்புறமுள்ள இரண்டு பூட்டுகள் உள்ளன. ஒன்றின் சாவி நிர்வாக அதிகாரியிடமும், மற்றொன்று தக்காரிடமும் உள்ளது. மதியம் நடை அடைத்து விட்டு வரும்போது மர்ம நபர் உள்ளே சென்று கொள்ளையடித்து விட்டு மீண்டும் மாலை நடை திறக்கும்போது வெளியே சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறைதான் நிர்வாகத்தினரால் இந்த உண்டியல்கள் திறக்கப்படும். கடந்த முறை உண்டியல் திறக்கப்பட்டபோது சுமார் ரூ.40 ஆயிரம் பணம் இருந்ததாக நிர்வாகத்தினரால் தெரிவிக்கப்பட்டது. 9வது மாதம் திறக்கப்பட வேண்டிய நிலையில் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.