பதிவு செய்த நாள்
26
செப்
2013
10:09
டேராடூன்: இயற்கை சீற்றத்தால் உருக்குலைந்த உத்தரகண்ட் மாநிலத்தின், கேதார்நாத் கோவிலுக்கு வழிபட வரும் பக்தர்கள் தங்க, வீடுகள், கூடாரங்கள் அமைக்கப்படுகின்றன. ஜூன், 16 – 17ம் தேதிகளில், உத்தரகண்ட் மாநிலத்தில் பெய்த பேய்மழை, அம்மாநிலத்தையே உருக்குலைத்தது. சாலைகள், வழிகள் சிதைந்து போயுள்ளன. ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால், கிராமங்கள் பல அழிந்தன; நிலச்சரிவு ஏற்பட்டதால், பாதைகள் மறைந்து போயின. இதில், பல ஆயிரம் ஆண்டு பழமையான, கேதார்நாத் சிவன் கோவில், கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலை வசதி அறவே இல்லாத அளவிற்கு, அப்பகுதி புரட்டி போடப்பட்டுவிட்டது. இதனால், ஹெலிகாப்டரில் மட்டுமே, அங்கு செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும், இம்மாதம், 11ம் தேதி முதல், கேதார்நாத் கோவிலில், 64 நாட்களுக்குப் பிறகு, பூஜைகள் துவங்கியுள்ளன. வரும், அக்டோபர், 1ம் தேதி முதல், தற்காலிக பாதைகள் வழியாக, கோவிலுக்கு, பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என, மாநில, முதல்வர் விஜய் பகுகுணா அறிவித்து உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனாலும், அதிக அளவில் பக்தர்கள் வரமாட்டார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், நூறு பேர் மட்டும் தங்கும் வகையிலான, கோவிலை சுற்றியுள்ள இடங்களில், சிறிய அளவிலான கூடாரங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான பணியில், மாநில அரசின் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.