பதிவு செய்த நாள்
03
அக்
2013
10:10
மேலூர்: ஆண்கள், உடலில் வைக்கோலை சுற்றிக் கொண்டும், பெண்கள் தலையில் மதுக்கலயம் சுமந்தும், உருவ பொம்மைகளை ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்தும் திருவிழா மேலூர் அருகே நேற்று நடந்தது. மேலூரில் உள்ள வெள்ளலூர் பகுதி, 58 கிராமங்களை உள்ளடக்கியது. இங்குள்ள ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழா, ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். கடந்த 15 நாட்களுக்கு முன்பு, 11 கரைகளை சேர்ந்த 22 அம்பலக்காரர்கள், 22 இளங்கச்சிகள் முன்னிலையில், அம்மனாக வழிபட கூடிய 7 சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டனர். இச்சிறுமிகள், 15 நாட்கள் இரவில் கோயிலில் தங்கி, பகலில் மக்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினர். இவர்களை மக்கள் தெய்வமாக கருதி வழிபட்டனர். திருவிழாவின் நிறைவு நாளான நேற்று, ஆண்கள் வைக்கோல் பிரியை உடலில் சுற்றிக் கொண்டு, முகத்தில் முகமூடியுடன் 7 கி.மீ., தூரம் நடந்துச் சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர். அதேபோல் 7 சிறுமிகள் முன்னால் நடக்க, தலையில் மதுக் கலயம் சுமந்தும், கைகளில் மண்பொம்மைகளை ஏந்தியும் பெண்கள் ஊர்வலமாக சென்றனர். வெள்ளலூரில் இருந்து 7 கி.மீ., நடந்து சென்று, குறிச்சிபட்டி சின்ன ஏழைகாத்தமன் கோயிலில் நேர்த்திக்கடனை செலுத்தினர்.