பதிவு செய்த நாள்
03
அக்
2013
10:10
சென்னை: திருப்பதி குடை, கவுனி தாண்டுவதை முன்னிட்டு, 1.85 லட்சம் ரூபாய் செலவில், 1,500 கிலோ எடையில், லட்டால் செய்யப்பட்ட திருப்பதி மலை, நேற்று பக்தர்களை ஈர்த்தது. திருப்பதி தேவஸ்தான திருக்குடை, வரும், 4ம் தேதி, கவுனி தாண்டுகிறது. அதை முன்னிட்டு, சென்னை, ஓட்டேரி ஒத்தவாடை சாலையில், இந்து அமைப்பு ஒன்றின் சார்பில், 1,500 கிலோ எடையில், லட்டால் செய்யப்பட்ட திருப்பதி மலை உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம், 1.85 லட்சம் ரூபாய் செலவில் உருவான இந்த லட்டு மலை, 450 கிலோ கடலைமாவு, 620 கிலோ சர்க்கரை, 350 கிலோ எண்ணெய், 25 கிலோ முந்திரி, 25 கிலோ திராட்சை, 40 கிலோ நெய் ஆகிய பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. நேற்று ஓட்டேரி, புளியந்தோப்பு, பெரம்பூர், அயனாவரம், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிவாசிகள் லட்டு மலையை வந்து தரிசித்தனர். தொடர்ந்து நேற்று மதியம் அங்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. அதையடுத்து நேற்று மாலையே, அந்த லட்டு மலை பிரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகிக்கப்பட்டது.