ராமனைப் பெற்றெடுத்த தாய் கோசலை என்னும் கவுசல்யா. அதனால் தான், வெங்கடேச சுப்ரபாதம் கவுசல்யா சுப்ரஜா என்று தொடங்குகிறது. சுப்ரஜா என்பதற்கு நேரான தமிழ்ச்சொல் நல்ல பிள்ளை. கவுசல்யா பெற்றெடுத்த நல்ல பிள்ளையான ராமனே எழுந்தருள்வாயாக! என்பது முதல் அடியின் பொருள். நல்லபிள்ளையைப் பெற்ற கவுசல்யாவின் பெயரால், தில்லைவிளாகம் ராமர் கோயிலில் (திருவாரூர் மாவட்டம்) உள்ள தீர்த்தத்திற்கு நல்லபிள்ளை பெற்றாள் குளம் என்ற பெயர் இருந்தது. தற்போது ராமதீர்த்தம் என்றாகி விட்டது. வனவாசம் கிளம்பிய ராமனுக்கு எவ்வித தீங்கும் நேரக்கூடாது என்பதற்காக கவுசல்யா ராமரின் மணிக்கட்டில் ரட்சை (பாதுகாப்பு கயிறு) கட்டினாள். அந்தக் கயிறு, இந்தக் கோயிலில் உள்ள ராமரின் கையில் இருக்கிறது.